- பூந்தமல்லி
- சென்னை
- புயல் டிட்வா
- போரூர்
- வலசரவக்கம்
- மதுரவாயல்
- திருவேற்கடூ
- காட்டுப்பாக்கம்
- அய்யப்பந்தங்கல்
பூந்தமல்லி, டிச.2: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் டிட்வா புயல் தாக்கம் காரணமாக நேற்று அதிகாலை முதல் கனமழை பெய்தது. குறிப்பாக பூந்தமல்லி, போரூர், வளசரவாக்கம், மதுரவாயல், திருவேற்காடு, காட்டுப்பாக்கம், ஐயப்பன்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டியது. இதனால் தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியது. பூந்தமல்லி ட்ரங்க் சாலை காட்டுப்பாக்கம் அருகே சாலையில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
தொடர்ந்து விடாமல் பெய்த மழையால் மாணவர்கள், மழையில் நனைந்தபடியே பள்ளிக்குச் சென்றனர். பிற்பகலிலும் மழை பெய்து கொண்டே இருந்ததால் பூந்தமல்லியில் சில தனியார் பள்ளிகள் அரை நாள் விடுமுறை அறிவித்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்பினர். விடுமுறை அறிவிக்கப்பட்ட தகவல் அறிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அழைத்து வர ஆட்டோ, மற்றும் கார்களில் அதிக அளவில் வந்ததால் பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே கடுமையான போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டது. மாலையில் பள்ளி முடிந்த பின் பல இடங்களில் மாணவ மாணவிகள் மழையில் நனைந்தவாறு வீடுகளுக்கு சென்றனர். இதனால் பெற்றோரும் மாணவர்களும் கடும் அவதியடைந்தனர்.
பூந்தமல்லி நெடுஞ்சாலை, வேலப்பன்சாவடி சர்வீஸ் சாலையில் தனியார் கல்லூரிக்கு முன்பாக இடுப்பளவு மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் இந்த வழியாக சென்ற வாகனங்கள் தேங்கி நிற்கும் மழை நீரால் சாலையில் உள்ள பள்ளங்கள் சிக்கிக் கொண்டன. இந்நிலையில், அந்த வழியாக காரில் வந்த நபர் தேங்கியிருந்த மழை நீரில் பள்ளம் இருப்பது தெரியாமல் காரை இயக்கி வந்தார் . அப்போது கார் பள்ளத்தில் தேங்கிய இடுப்பளவு மழைநீரில் மூழ்கத் தொடங்கியது. இதனால் அதில் வந்த நபர் காரை அப்படியே விட்டுவிட்டு இடுப்பளவு நீரில் நீந்தி வெளியே வந்தார். மேலும் அதே பகுதியில் சாலையோர பள்ளத்தில் தேங்கி இருந்த மழை நீரில் வேன் ஒன்று சிக்கிக்கொண்டது. இதையடுத்து கிரேன் மூலம் அந்த வேனை அங்கிருந்து அகற்றினர். தொடர் மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதித்தது.
