×

விருதுநகர் அருகே சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க மக்கள் கோரிக்கை

விருதுநகர், டிச.1: விருதுநகர் அருகே மேல சின்னையாபுரம் ஊராட்சியில் உள்ள சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விருதுநகர் அருகே மேல சின்னையாபுரம் ஊராட்சியில் சுமார் 400க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு வசிக்கும் பெரும்பாலானோர், விவசாயம் மற்றும் கூலித்தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஊராட்சியின் பேருந்து நிறுத்தம் அருகே, பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சிறிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த குடிநீர் தொட்டியில் முறையாக பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படாததால், தூண்கள் சேதமடைந்து, அதில் உள்ள சிமெண்ட் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

சேதமடைந்த இந்த நீர்த்தொட்டியால் விபத்து அபாயம் உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே, சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை ஊராட்சி நிர்வாகம் விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Virudhunagar ,Upper Sinnaiapuram Uratchi ,Upper Sinnaiapuram Oradchi ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...