×

போதையில் டார்ச்சர் செய்த கள்ளக்காதலனை அடித்துக் கொன்ற பெண் உட்பட 3 பேருக்கு ஆயுள் சிறை

*வேலூர் நீதிமன்றம் தீர்ப்பு

வேலூர் : தஞ்சாவூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் இப்ராகிம், கூலித்தொழிலாளி. இவரது மனைவி கோகிலா. இருவரும் கடந்த 19 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். காட்பாடி விருதம்பட்டு சர்க்கார் தோப்பு பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். இங்கு இப்ராகிம் கூலி வேலைக்கு சென்று வந்தார்.

இந்நிலையில் சென்னையில் செல்போன் நிறுவனத்தில் வேலை செய்து வந்த காட்பாடி வஞ்சூரை சேர்ந்த சுனில்(25) என்பவருக்கும், கோகிலாவுக்கும் இடையே கள்ளக்காதல் ஏற்பட்டது. இவர்களது கள்ளக்காதலை அறிந்த இப்ராகிம், தனது மனைவியை பிரிந்து, 2 குழந்தைகளை அழைத்துக் கொண்டு மன்னார்குடி சென்று விட்டார்.

கோகிலாவுக்கு சிறுவயது முதலே தன்னுடன் பழகி வந்த மன்னார்குடியை சேர்ந்த மணி(எ) மணிகண்டன்(33), அவரது நண்பர் சதீஷ்(எ) சதீஷ்குமார்(32) ஆகிய இருவரும் அடிக்கடி கோகிலாவை சந்தித்து செல்வது வழக்கமாம். இந்நிலையில் கணவனை பிரிந்த கோகிலாவுடன் கள்ளத்தொடர்பில் இருந்து வந்த சுனில், அடிக்கடி மது குடித்து விட்டு வந்து கோகிலாவை அடித்து சித்திரவதை செய்து வந்தார்.

இதுகுறித்து கோகிலா தன்னுடைய நண்பர்களான மணிகண்டன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோரிடம் தெரிவித்தார். அவர்கள் சுனிலிடம் கோகிலாவிடம் தகராறு செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தினர். ஆனாலும், சுனில் கடந்த 2020ம் ஆண்டு மே 8ம் தேதி மதுபோதையில் சென்று கோகிலாவிடம் தகராறு செய்தார். உன்னுடைய கணவர் உன்னை விட்டு பிரிந்து சென்று விட்டார். எனவே என்னுடன் மட்டுமே இருக்க வேண்டும் என்று கூறி அடித்து உதைத்தாராம்.

தொடர்ந்து மறுநாள் காலையும் கோகிலா வீட்டிற்கு சென்று தகராறு செய்துள்ளார். இதனால் கோகிலா வீட்டிலிருந்து வெளியே சென்றார். அன்று இரவு 10.30 மணியளவில் மீண்டும் கோகிலா வீட்டுக்கு திரும்பினார்.

இதை அறிந்து மீண்டும் கோகிலா வீட்டிற்கு சென்ற சுனில் தகராறு செய்துள்ளார். சுனிலால் தனது சுதந்திரமும், நிம்மதியும் பறிபோவதாக வேதனையடைந்த கோகிலா மணிகண்டன், சதீஷ், தனது தந்தை முத்து ஆகியோருக்கு போன் செய்து வரவழைத்தார்.

சுனிலால்தான் கடந்த 10 ஆண்டுகளாக என்னுடைய வாழ்க்கை பாழாகி கணவன், குழந்தைகளுடன் பிரிந்து சென்று விட்டார். எனது வாழ்க்கையை நாசப்படுத்திய சுனிலை தீர்த்துக்கட்ட வேண்டும் என்று நண்பர்கள் மணிகண்டன், சதீஷ்குமார் ஆகியோரிடம் கூறினார். இதையடுத்து திட்டமிட்டபடி சுனிலை நைசாக பேசி வீட்டுக்கு கோகிலா வரவழைத்தார்.

வீட்டுக்கு வந்த சுனிலை, கோகிலாவின் தந்தை முத்து, மணிகண்டன் மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் சேர்ந்து தலையில் கத்தியால் வெட்டியும், இரும்புராடு மற்றும் கட்டையாலும் தாக்கினர். இதில் சுனில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் சுனில் தலையை சிதைத்து மூளையை அருகில் உள்ள கிணற்றில் வீசினர். பின்னர் சுனிலின் சடலத்தை அப்பகுதியில் உள்ள பாலாற்றை ஒட்டிய கீரை தோட்டத்தில் வீசிவிட்டு சென்றனர்.

காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து விருதம்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு விசாரணை சத்துவாச்சாரியில் உள்ள முதன்மை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி சாந்தி தலைமையில் நடந்து வந்தது.

கடந்த ஆண்டு கோகிலாவின் தந்தை முத்து இறந்துவிட்ட நிலையில், நேற்று காலை வழக்கு விசாரணை முடிந்து கோகிலா, மணிகண்டன் சதீஷ்குமார் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சாந்தி தீர்ப்பு வழங்கினார்.

அபராதம் கட்டத் தவறினால் மேலும் 3 மாதம் ஜெயில் தண்டனையை அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு வழக்கறிஞர் சிவப்பிரகாசம் வாதாடினார்.

Tags : Vellore Court ,Vellore ,Ibrahim ,Thanjavur District Mannarkudi ,Kokila ,Kadpadi Virudhampattu Sarkar ,
× RELATED 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ வழக்கில் கைது