- புயல் டிட்வா
- முத்துப்பேட்டை
- திருவாரூர் மாவட்டம்
- இலங்கை
- வங்காள விரிகுடா
- புதுச்சேரி
- ஆந்திரப் பிரதேசம்...
முத்துப்பேட்டை, நவ. 29: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பகுதியில் டிட்வா புயல் எதிரொலியாக கனமழை பெய்து வருவதால் 6 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. வங்கக்கடலில் இலங்கை அருகே டிட்வா புயல் உருவாகி உள்ளதாகவும் இது புதுவை ஆந்திரா இடையே வரும் 30ந்தேதி கரையை கடக்கிறது. இதன் காரணமாக திருவாரூர் மாவட்டம் உள்ளிட்ட தமிழ்நாட்டில் அதிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக முத்துப்பேட்டை பகுதியில் நேற்று மாலை முதல் அதிகமான மழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் சூழ்ந்து வருகிறது. ஏற்கனவே இப்பகுதியில் ஏற்கனவே பெய்த கனமழையால் மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. முத்துப்பேட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதித்து மீன்வளத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டனர்.
இதில் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் மீனவர்கள் தங்கள் படகு வலை உள்ளிட்ட உடைமைகளை பத்திரப்படுத்தி வைக்க வேண்டுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரைமீன்பிடிக்க எந்த பகுதிகளுக்கும் செல்லக்கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. என அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டது.
அதனால் முத்துப்பேட்டை, ஆசாத்நகர் தெற்கு தெரு, கோவிலூர், ஆலங்காடு, பேட்டை, ஜாம்புவானோடை, செங்காங்காடு, தில்லைவிளாகம், இடும்பாவனம், தொண்டியக்காடு உள்ளிட்ட பகுதியில் உள்ள சுமார் 6ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வில்லை. அதனால் மீனவர்கள் செல்லும் பைப்பர் படகுகள் ஆசாத்நகர், தெற்குத்தெரு, பேட்டை, தொண்டியக்காடு உள்ளிட்ட பகுதியில் ஆங்காங்கே பத்திரமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
