- விநியோகப் பிரிவு
- குன்னம்
- அமைச்சர்
- சிவசங்கர்
- விநியோகம்
- பெரம்பலூர் மாவட்டம்
- மாவட்ட கலெக்டர்
- போக்குவரத்து
- சிவசாங்கர்...
குன்னம், நவ.28: குன்னத்தை தலைமையிடமாக கொண்டு புதிய மின்பகிர்மானக் கோட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்டம் குன்னத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மின்பகிர்மான கோட்டத்தையும், செயற்பொறியாளர் அலுவலகத்தை மாவட்ட கலெக்டர் தலைமையில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் பொது மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் மிருணாளினி தலைமையில் பெரம்பலூர் எம்எல்ஏ பிரபாகரன் முன்னிலை வகித்தார்.நிகழ்ச்சியில் பேசிய போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் குன்னத்தில் புதிய பேருந்து பணிமனை, குன்னம் தொழில்நுட்பக் கல்லூரி, மகளிர் விடியல் பேருந்துகள், காரை தொல்லுயிர் பூங்கா என நமது குன்னம் சட்டமன்ற தொகுதிக்கு குன்னத்தை தலைமையிடமாகக் கொண்டு மின் பகிர்மான வட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் மின் நுகர்வோர்களின் குறைகளை உடனுக்குடன், நிவர்த்தி செய்யவும், தடையில்லா தரமான மின்சாரத்தை வழங்கிடவும், ஒரே கோட்டமாக செயல்பட்டு வந்த பெரம்பலூர் கோட்டம், இரண்டாகப் பிரிக்கப்பட்டு புதிய குன்னம் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கோட்டத்தில் லப்பைக்குடிக்காடு, குன்னம் மற்றும் சிறுவாச்சூர் ஆகிய பகுதிகளின் உதவி செயற்பொறியாளர்கள், பொறியாளர்களை உள்ளடக்கிய உப கோட்டங்கள் மற்றும் லப்பைக்குடிக்காடு, வாலிகண்டபுரம், சின்னாறு அணை, வ.களத்தூர், வேப்பூர், மருதையான் கோவில், துங்கபுரம், சிறுவாச்சூர், பாடாலூர், கொளக்காநத்தம், செட்டிக்குளம் ஆகிய 11 பிரிவு அலுவலகங்களை உள்ளடக்கியதாக செயல்படும். மேலும் 10 எண்ணிக்கையிலான துணை மின் நிலையங்கள் குன்னம் கோட்டத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும்.
இது வரையில், குன்னம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள மின் நுகர்வோர்கள், மின்சாரம் தொடர்பான தங்களது கோரிக்கைகளை பெரம்பலூரில் உள்ள செயற்பொறியாளரை அணுகி நிவர்த்தி செய்து வந்தார்கள், தற்போது புதிய கோட்ட அலுவலகம் குன்னத்திலேயே துவக்கப்பட்டதால் மின்சாரம் சார்ந்த கோரிக்கைகளை இனி இங்கேயே வழங்கலாம்.குன்னத்தில் கோட்ட அலுவலகம் திறக்கப்பட்டதால் 1,40,399 மின் நுகர்வோர்கள் தங்களது மின்சாரம் தொடர்பான கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றிக் கொள்ளவும், மின் நுகர்வோர்களுக்கு தரமான தடையில்லா மின்சாரத்தினை விரைந்து அளித்திடவும், சிறந்த நுகர்வோர் சேவை வழங்கிடவும் வசதியாக இருக்கும். மக்களின் தேவைகளை அறிந்து திட்டங்களை வழங்கிவரும் தமிழக முதல்வருக்கு மக்கள் அனைவரும் என்றும் உறுதுணையாக இருக்க வேண்டும்.என்று தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், ஆலத்தூர் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் கிருஷ்ணமூர்த்தி, அட்மா தலைவர்கள் ஜெகதீசன், ராஜேந்திரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சுப்ரமணியன் திருச்சி மின் பகிர்மான தலைமை பொறியாளர் கீதா, மேற்பார்வை பொறியாளர்கள் மேகலா, செந்தாமரைச்செல்வி செயற்பொறியாளர்கள் பரமேஸ்வரி, முருகானந்தம், அசோக்குமார் உட்பட மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
