×

சேலத்தில் பெங்களூரு-மதுரை பைபாஸ் சாலையில் தீ பிடித்து எரிந்த சொகுசு காரில் 750 கிலோ குட்கா சிக்கியது: 2 பேர் தப்பியோட்டம்

சேலம்: சேலத்தில் பெங்களூரு-மதுரை பைபாஸ் சாலையில் இன்று அதிகாலை தீ பிடித்து எரிந்த சொகுசு காரில் 750 கிலோ குட்காவை போலீசார் பறிமுதல் செய்து, தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர். பெங்களூரு-மதுரை பைபாஸ் சாலையில் சேலம் கந்தம்பட்டி ஆர்டிஓ அலுவலகம் அருகில் உள்ள தனியார் பைக் ஷோரூம் பகுதியில் இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஒரு சொகுசு கார் வந்தது. பெங்களூருவில் இருந்து சேலம் வழியே மதுரை நோக்கிச் சென்ற அந்த காரின் இன்ஜின் பகுதியில் இருந்து புகை வெளியேறியது. இதனால், காரை ஓட்டி வந்த வாலிபர், சற்று சாலையோரமாக நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். அவருடன் மற்றொரு வாலிபரும் காரில் இருந்து இறங்கி, நின்றார்.

அடுத்த சில நிமிடங்களில் காரின் முன்பகுதி தீ பற்றி எரிந்தது. அவ்வழியே வந்த வாகன ஓட்டிகள், தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும், சூரமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து, காரில் எரிந்த தீயை அணைத்தனர். இரவு ரோந்து பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் கவிதா, சிறப்பு எஸ்ஐ பழனியப்பன் தலைமையிலான போலீசாரும் சம்பவ இடம் வந்து விசாரித்தனர். அப்போது, தீ பற்றி எரிந்த காரில் இருந்து இறங்கி நின்றிருந்த 2 வாலிபர்களும், அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இதனால் சந்தேகம் கொண்ட இன்ஸ்பெக்டர் கவிதா தலைமையிலான போலீசார், காருக்குள் என்ன இருக்கிறது என சோதனையிட்டனர். அதில் உள்ளே சாக்கு மூட்டைகளில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதை புகையிலை பொருட்கள் இருந்தது.

750 கிலோ எடை கொண்ட அந்த குட்காவை பறிமுதல் செய்து, எரிந்த காரை மீட்டு சூரமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு வந்தனர். பெங்களூருவில் இருந்து குட்கா கடத்தி வந்த வாலிபர்கள், கார் தீ பற்றி எரிந்ததும், விட்டு விட்டு ஓட்டம் பிடித்தது விசாரணையில் தெரிந்தது. மேலும், அந்த கார் மேற்குவங்க மாநில பதிவெண் கொண்டதாக இருந்தது. விசாரணையில், அது போலி நம்பர் பிளேட் எனத்தெரியவந்தது. இக்குட்கா கடத்தலில் ஈடுபட்டவர்கள் பற்றியும், காரின் உரிமையாளர் யார்? என்பது பற்றியும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தீ பற்றி எரிந்த காருக்குள் 750 கிலோ குட்கா சிக்கிய இச்சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Bangalore-Madurai bypass road ,Salem ,Bangalur-Madurai bypass road ,Salem Kandampatty RTO Office ,
× RELATED 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய சிறுவன் போக்சோ வழக்கில் கைது