×

வளவனாற்றில் ஆகாயத்தாமரை மண்டி கிடப்பதால் 2 ஆயிரம் ஏக்கர் வயலில் தேங்கி நிற்கும் மழைநீர்

திருத்துறைப்பூண்டி, நவ. 27: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2000 ஏக்கருக்கும் மேலான விளை நிலங்கள் மழை நீரில் மூழ்கியுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வார காலமாக பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர் மாவட்டத்தில் பெய்த மழையினால், சம்பா – தாளடி சாகுடி செய்யப்பட்ட இளம் பயிர்கள் மழை நீரில் மூழ்கியது. மழைநீர், வடிய வழியில்லாமல், வயல் வெளிகளில் குளம்போல தேங்கி நிற்கிறது. இதனால் நெற்பயிர்கள் அழுகும் நிலையில் உள்ளது.

குறிப்பாக திருத்துறைப்பூண்டி வட்டத்தில் கட்டிமேடு, பிச்சன் கோட்டகம், ஆதிரெங்கம், மேலமருதூர் பகுதியில் வளவனாற்று கரையோரம் சாகுபடி செய்யப்பட்டுள்ள 2000 ஏக்கர் தாளடி பயிர்கள் நீரில் மூழ்கி உள்ளது. அருகில் உள்ள வளவனாற்றில் தேங்கியுள்ள வெங்காயத்தாமரை செடிகளே இதற்கு மிக முக்கிய காரணமாக என கூறப்படுகிறது. சில இடங்களில் விவசாயிகளே தங்கள் சொந்த செலவில் தொழிலாளர்களை கொண்டு செடிகளை அகற்றி வருகின்றனர். இப்பகுதிகளில் மழை மேலும் மூன்று நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளதால், விவசாயிகள் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, கூட்டுறவு வங்கியில் கடன் பெற்று சாகுபடி செய்யப்பட்டு 20 நாட்களே ஆன இளம் பயிர்கள் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் முழுமையும் மழை நீரில் மூழ்கி உள்ளது. ஏற்கனவே ஏக்கருக்கு முப்பதாயிரம் சாகுபடிக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சொந்தமாக வளவனாற்றில் தேங்கியுள்ள வெங்காயதாமரை செடிகளை அகற்ற கூடுதல் பணம் செலவளித்து வருகிறோம். இது மிகுந்த வேதனையளிக்கிறது. எனவே தண்ணீரை வடிய வைக்க பொதுப் பணித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களை வேளாண்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு மேற்கொண்டு, உரிய கணக்கெடுப்பு செய்து முழுமையாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையும், மீண்டு வரும் பயிர்களுக்கு உரிய வழிகாட்டுதலுடன் நுண்ணூட்ட உரங்களை வழங்கினால், விவசாயிகளுக்கு ஆறுதலாக இருக்கும். இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Agayathamarai ,Valavana river ,Thiruthuraipoondi ,Thiruvarur district ,Thiruvarur ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...