×

பெரம்பலூரில் வரும் 29ம் தேதி நடைபெறும் கலைப்போட்டிகளில் ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்

பெரம்பலூர், நவ.26: பெரம்பலூர் மாவட்ட கலை பண்பாட்டுத் துறையால் வரும் 29ஆம் தேதி திருச்சிமண்டல கலை பண்பாட்டு மையம் மூலம் பெரம்பலூரில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கலைப் போட்டிகளில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்கலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் கூறியதாவது:
திருச்சிராப்பள்ளி மண்டல கலை பண்பாட்டு துறையின் சார்பாக, பெரம்பலூர் சவகர் சிறுவர் மன்றத்தின் மூலம், பெரம்பலூர் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் (குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம்) வரும் 29ஆம் தேதி காலை 9 மணி முதல் பெரம்பலூர் மதன கோபாலபுரம் நான்காவது குறுக்குத் தெருவில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட அளவில் 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப்பிரிவில் மாணவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவித்திடவும், கலை விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய கலைகளில் போட்டிகள் நடத்திவுடம் இக்கலை போட்டிகளில் முதலிடம், இரண்டாமிடம், மூன்றாமிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசும், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

மேலும், இப்போட்டிகளில் 09-12, 13-19 ஆகிய வயதுப் பிரிவுகளில் முதலிடம் பெற்றவர்கள் மாநில அளவிலான கலைப் போட்டியில் பங்கேற்க அனுப்பி வைக்கப்படுவார்கள். மேலும், பரதநாட்டியம், குச்சிப் புடி, மோகினி ஆட்டம் போன்ற நடனங்களும் ஆடலாம். முழு ஒப்பனை மற்றும் உரிய உடைகளுடன் நடனம் இருத்தல் வேண்டும். திரைப் படப் பாடல்களுக்கான நடனங்கள் (கர்நாடக இசைப் பாடல்களுக்கான திரைபட நடனங்கள் நீங்களாக) மேற்கத்திய நடனங்கள் மற்றும் குழு நடனங்கள் அனுமதி இல்லை. பக்க வாத்தியங்களையோ ஒலி நாடாக்களையோ பயன் படுத்தி கொள்ளலாம். இவற்றை, போட்டியில் பங்கேற்பவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். அதிக பட்சம் 5 நிமிடங்கள் நடனமாட அனுமதிக்கப்படும். தமிழகத்தின் மாண்பினை வெளிப்படுத்தும் கிராமியக் கலை நடனங்கள் ஆடலாம்.

கர்நாடக இசை தேசிய பாடல்கள், சமூக விழிப்புணர்வு பாடல்கள், நாட்டுப்புறப் பாடல்கள் ஆகியவற்றில் தமிழ்பாடல்கள் மட்டுமே பாட வேண்டும். பக்க வாத்திய கருவிகளை பாடுபவர்கள் மட்டும் பயன் படுத்தி கொள்ளலாம். மேற்கத்திய இசை திரை இசை பாடல்கள், குழு பாடல்கள் அனுமதி இல்லை. அதிக பட்சம் 5 நிமிடங்கள் பாடலாம். ஒலி பதிவினை பயன்படுத்தக்கூடாது.

ஓவியப் போட்டிக்கு இந்தத் துறையால் வழங்கப்படும் ஓவியத் தாள்களையே பயன்படுத்த வேண்டும். பென்சில், கிரையான் வண்ணங்கள், போஸ்டர் கலர், வாட்டர் கலர், பெயின்டிங் என எவ்வகையிலும் ஒவியங்களும் அமையலாம். ஓவியத்தால் வண்ணங்கள் தூரிகைகள் உள்பட்ட தங்களுக்கு தேவையானவற்றை போட்டியாளர்களே கொண்டு வருதல் வேண்டும். குழுவாக ஓவியங்கள் வரைய அனுமதி இல்லை. ஒவ்வொரு வயது பிரிவுக்கும் தனித்தனியாக தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப் படும். மேற்படி,கடந்த ஆண்டுகளில் இப்போட்டிகளில் முதல் பரிசு பெற்ற மாணவர்கள் பங்கேற்க அனுமதி இல்லை.

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 5-8, 9-12, 13-16 ஆகிய வயதுப்பிரிவுகளில் உள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல், வயது சான்றிதழ் மற்றும் பள்ளிப்படிப்பு சான்றிதழ்களுடன் மாவட்ட அரசு இசைப்பள்ளி, 4-வது குறுக்குத் தெரு, மதனக்கோபாலபுரம், பெரம்பலூர் என்ற இடத்தில் வருகிற 29ஆம் தேதி காலை 9 மணிக்கு வருகை பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும், விவரங்களுக்கு பெரம்பலூர் மாவட்ட சவகர் சிறுவர் மன்ற திட்ட அலுவலரை (9659507773) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்டக் கலெக்டர் வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Kalaipoti ,Perambalur ,Church Arts and Culture Centre ,Perambalur District Department of Arts and Culture ,Collector ,Mrinalini ,
× RELATED சமுதாய திறன் பள்ளியில் வேலைவாய்ப்பு பயிற்சி