×

சிவகங்கையில் அதிகபட்சமாக 90.4 மி.மீ மழைப்பதிவு

 

சிவகங்கை, நவ. 25: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக காலம் தவறிய பருவ மழை, போதிய மழை இல்லாமை உள்ளிட்டவைகளால் கண்மாய், குளங்களில் நீர் தேங்குவதில் பாதிப்பு ஏற்படுகிறது. வழக்கமாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை பெய்யும் வடகிழக்கு பருவமழையால் கிடைக்கும் நீர் அடுத்த ஆண்டு கோடைகாலம் வரை நீர் நிலைகளில் இருக்க வேண்டும். ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக அதுபோல் இல்லாமல் கோடைக்கு முன்பே நீர் இல்லாமல் குளங்கள், கண்மாய்கள் வறண்டு காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பரு மழை பெய்தது. அதன் பிறகு மழை இல்லை. கடந்த பிப்ரவரி மாதம் சில நாட்கள் லேசான மழை பெய்தது.

இது போல் மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை அவ்வப்போது சில நாள்கள் மழை பெய்தது. தற்போது கண்மாய்களில் நீர் இல்லாத நிலையில் விவசாயம் முழுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது சாரல் மழை பெய்தது. நேற்று முன்தினம் மாலை மாவட்டம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது. தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு முதல் நேற்றும் பகலிலும் சாரல் மழை தொடர்ந்து பெய்து கொண்டே இருந்தது. இதையடுத்து நேற்று மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து கலெக்டர் பொற்கொடி உத்தரவிட்டார். கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக சிவகங்கையில் 90.4 மி.மீ மழை பெய்தது.

தேவகோட்டையில் 73மி.மீ, திருப்புவனம் 68.4மி.மீ, காளையார்கோவிலில் 67.4மி.மீ, காரைக்குடியில் 65மி.மீ, சிங்கம்புணரியில் 46.4மி.மீ, மானாமதுரையில் 44.2மி.மீ, திருப்பத்தூரில் 44மி.மீ, இளையான்குடியில் 27மி.மீ, மழை பெய்தது. பகல் நேரங்களில் பெய்யும் சாரல் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

 

Tags : Shivaganga ,Sivaganga ,Sivaganga district ,
× RELATED பவுர்ணமி கூட்டம் அலைமோதிய வேளையில்...