அரியலூர், நவ. 22: அரியலூர் மாவட்டம், வெங்கனூர் அருகே பல்வேறு குற்ற வழக்கில் தொடர்புடைய கவியரசன் என்பவரை போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம், வெங்கானூர் கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் கவியரசன்(23). இவர், பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் ஆவார்.
இவர்மீது, வெங்கனூர் காவல் நிலையத்தில் வழிப்பறி, அடிதடி மற்றும் போக்சோ உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இந்நிலையில், கவியரசன் கடந்த 26.10.2025 அன்று வெங்கானூர் காவல் நிலையம் முன்பு வந்து காவல்துறையினரை இழிவாகப் பேசி, காவலரைக் கல்லால் அடித்துக் காயம் ஏற்படுத்தி, கத்தியைக் காட்டி மிரட்டி, கொலை செய்ய முயற்சித்துள்ளார். இதனையடுத்து, காவல்துறையினர் அவரை கைது செய்து, வழக்குப் பதிவு செய்து திருச்சி மத்தியில் சிறையில் அடைத்தனர்.
கவியரசன் வெளியே வந்தால் மேலும் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடும் என்பதால், கவியரசன் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி கீழப்பழூர் காவல் ஆய்வாளர் வெங்கடாசலம் மற்றும் அரியலூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சாலை இராம் சக்திவேல் பரிந்துரை செய்ததின் அடிப்படையில், அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி மேற்ப்பரிந்துரையை ஏற்று, கலெக்டர் ரத்தினசாமி நேற்று கவியரசன் என்பவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து, நேற்று அதற்கான ஆணை பிரதி அரியலூர் மாவட்ட காவல்துறையினரால் திருச்சி மத்திய சிறை காவல் அதிகாரியிடம் வழங்கப்பட்டது.
