×

இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வகையில் சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக பயிற்சிகள் வழங்க திட்டம்

 

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலில், தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்களின் தலைமையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மகளிர் மேம்பாடு நிறுவனமானது கிராமப்புற பெண்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கான பல்வேறு திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. 2025-26ஆம் ஆண்டில் கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தித் தருவதை கருத்தில் கொண்டு, 42,000 இளைஞர்களுக்கு திறன் பயிற்சியுடன் கூடிய வேலை வாய்ப்பும், சுய வேலைவாய்ப்பு பயிற்சிகளும் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு, திறன் பயிற்சித் திட்டங்களின் மற்றுமொரு முயற்சியாக சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் (Community Skill School) வாயிலாக பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் என்பது, உள்ளூரில் உள்ள அனுபவமிக்க நிபுணர்களையே முதன்மை பயிற்றுநர்களாகக் கொண்டு, தங்கள் சொந்த கிராமங்களில் உள்ள இளைஞர்களுக்கு தங்கள் கள அறிவை நேரடியாகப் பகிர்ந்து கொள்ளும் முறையாகும். சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் வாயிலாக, கொத்தனார், எலக்ட்ரீசியன், இருசக்கர வாகன பழுது பார்ப்பு, ஏ.சி மெக்கானிக், ஆரி எம்ராய்டரி, வாகன ஓட்டுநர் உரிமம், சூரிய ஒளி பலகை நிறுவுதல், அழகு நிலைய மேலாண்மை போன்ற 30 வகையான தொழில் பிரிவுகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது.

நடப்பு ஆண்டில், ரூ.25 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு முழுவதும் 2,500 சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் உருவாக்கப்படவுள்ளன. இவற்றின் வாயிலாக 50,000 பயனாளிகளுக்கு பயிற்சிகள் வழங்கி வேலை வாய்ப்புகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. கிராமப்புற மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் குழு உறுப்பினர்களின் குடும்பத்தை சேர்ந்த 18 முதல் 45 வயது வரையிலான ஆண், பெண் என இருபாலரும் பயன் பெறும் வகையில் உள்ளூர் தேவைகளின் அடிப்படையில் பயிற்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகள் செயல்படுத்துவதற்கான திருத்தப்பட்ட கூடுதல் வழிமுறைகளின்படி முதற்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் 1,420 உறுப்பினர்களுடன் துவக்கப்பட்ட 74 சமுதாயத் திறன் பயிற்சி பள்ளிகளின் செயல்பாடுகளை, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் திருமதி. ஆர்.வி. சஜீவனா, இ.ஆ.ப., அவர்கள், காணொளி வாயிலாக திட்ட அலுவலர்கள், பணியாளர்கள், பயிற்றுநர்கள், பயிற்சியாளர்கள் ஆகியோருடன் நேரடியாக கலந்துரையாடி ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள சமுதாயத் திறன் பயிற்சிப் பள்ளிகளை விரைந்து துவக்கிட தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் 20.11.2015, 01.12.2025 மற்றும் 10.12.2025 ஆகிய நாட்களில் மூன்று கட்டங்களாகத் துவங்கப்படவுள்ளன. இலவசமாக, உள்ளூரிலேயே, குறுகிய காலத்தில், பகுதி நேரமாக வழங்கப்படும் இத்தகைய திறன் பயிற்சிகளில் கலந்து விருப்பமுள்ள இளைஞர்கள், அந்தந்த மாவட்டத்தின் மாவட்ட திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வட்டார இயக்க மேலாளர் ஆகியோரை தொடர்பு கொள்ளவும்.

 

Tags : Chennai ,Chief Minister of ,Tamil ,Nadu ,Tamil Nadu Women's Development Institute ,Deputy ,
× RELATED திட்டமிடாத விதிகளால் பெரும் குழப்பம்;...