×

இலவச வீடு, வேலை வழங்க கோரி நெல்லையில் திருநங்கைகள் திடீர் மறியல்

*தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் ஒருவர் தற்கொலை முயற்சி

நெல்லை : குடியிருக்க வீடு மற்றும் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக கொக்கிரகுளம் சாலையில் திருநங்கைகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வராததால் எம்ஜிஆர் சிலை அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஒரு திருநங்கை ஆற்றுப்பாலத்தில் இருந்து தாமிரபரணி ஆற்றில் குதிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

நெல்லை தாலுகாவிற்கு உட்பட்ட நரசிங்கநல்லூர் பகுதியில் திருநங்கைகளுக்கு அரசு சார்பில் வீடுகள் கட்டி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வீடு கிடைக்காமல் சுமார் 60க்கும் மேற்பட்ட திருநங்கைகள் வசித்து வருகின்றனர்.

அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பு இல்லாததால் குடியிருப்பு மற்றும் வீடுகளுக்கு வாடகை செலுத்த முடியாத நிலை உள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு இலவச வீடு மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சிறப்பு முகாமில் மனு அளித்துள்ளனர்.

இந்த மனுக்கள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால், வாழ்வாதாரத்தை பாதுகாக்க இலவச வீடு மற்றும் வேலை வாய்ப்பு வழங்க வலியுறுத்தி திருநங்கைகள் நேற்று நண்பகல் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு கொக்கிரகுளம் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் கொக்கிரகுளம் – மேலப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பி விட்டனர். இந்நிலையில் அதிகாரிகள் யாரும் வராததால் கொக்கிரகுளம் எம்.ஜி.ஆர் சிலை அருகே வந்த திருநங்கைகள் அங்கு மெயின்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு நெல்லை சந்திப்பு செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போலீசார் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதற்கிடையில் மறியலில் ஈடுபட்ட திருநங்கை ஒருவர் திடீரென எழுந்து ஓடிச்சென்று தாமிரபரணி ஆற்றுப் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயற்சித்தார்.

அப்போது அங்கிருந்தவர்கள் அவரை காப்பாற்றி அழைத்து வந்தனர். இந்நிலையில் அங்கு வந்த கலெக்டர் காரை திருநங்கைகள் திடீரென வழிமறித்து முற்றுகையிட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றனர்.

இந்த சம்பவத்தால் நெல்லை கொக்கிரகுளம் கலெக்டர் அலுவலகம் முன்பாகவும், எம்ஜிஆர் சிலை முன்பாகவும் சுமார் அரை மணி நேரம் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் திருநங்கைகளை நெல்லை கலெக்டர் அலுவலகம் அழைத்து வந்த பாளையங்கோட்டை இன்ஸ்பெக்டர் மகேஷ், நெல்லை தாசில்தார் சந்திரஹாசன், மாவட்ட சமூக நல அலுவலர் தாஜூன்னிஷா பேகம் மற்றும் அலுவலர்கள் இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.

Tags : Tamiraparani River Bridge ,Kokkrakulam Road ,Paddy Collector's Office ,MGR ,
× RELATED இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு...