×

2026 தேர்தலில் மட்டுமல்ல, 2000 ஆண்டுக்கால ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டத்திலும் நாம் தான் வெல்வோம் என்பதை நிரூபிக்கட்டும் அறிவுத்திருவிழா: உதயநிதி ஸ்டாலின் அறிக்கை

சென்னை: 2026 தேர்தலில் மட்டுமல்ல, 2000 ஆண்டுக் கால ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டத்திலும் நாம் தான் வெல்வோம் என்பதை நிரூபிக்கட்டும், அறிவுத்திருவிழா இது கொள்கைக்கு கிடைத்த வெற்றி என்று இளைஞர் அணி செயலாளர், துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திமுகவின் 75ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில், இளைஞர் அணியின் சார்பில் நடத்தப்படும் அறிவுத்திருவிழாவில், காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு நூல் வெளியீட்டு விழாவையும் ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தையும் மிகச்சிறப்பாக நடத்தி முடித்திருக்கிறோம்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலைப் புரட்டிப் பார்த்தவர்களும் சரி, (1120 பக்கங்கள் கொண்ட புத்தகம் என்பதால், முழுமையாகப் படித்து முடிக்க சில வாரங்களாவது ஆகும்) ‘இருவண்ணக்கொடிக்கு வயது 75’ கருத்தரங்கத்தில் பேசப்பட்ட உரைகளைக் கேட்டவர்களும் சரி, `75 ஆண்டுக்கால தி.மு.க. இத்தனை தளங்களில் இத்தனை பங்களிப்புகளைச் செய்திருக்கிறதா’ என்று வியந்து போகின்றனர்.

முற்போக்கு புத்தகக் காட்சியில் திராவிட இயக்க நூல்கள் மட்டுமல்லாது பன்முக முற்போக்குப் புத்தகங்களும் இடம்பெற்றுள்ளன. பாசிசத்தை எதிர்ப்பதற்கான வழிகளில் இதுவும் ஒன்று. முற்போக்கு புத்தகங்களைப் பதிப்பிக்கும் பதிப்பாளர்கள், ‘அரசியல் நூல்கள் மட்டுமே இடம்பெறும் இதுபோன்ற ஒரு முயற்சியை இதற்கு முன்பு சிலர் முயன்றும் அது வெற்றியடையவில்லை. ஆனால், இப்படி ஒரு மகத்தான முன்னெடுப்பைச் சாத்தியப்படுத்தும் ஆற்றல் திமுகவுக்கு மட்டுமே உண்டு’ என்று நம்மை மனமாரப் பாராட்டுகின்றனர்.

இளைஞர் அணிச் செயல்வீரர்களிடம் கேட்டுக்கொள்வதெல்லாம் ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ நூலை வாங்கிப் படியுங்கள், பரப்புங்கள், நூல் அறிமுகக் கூட்டங்களைத் தமிழ்நாடு முழுவதும் நடத்தி விவாதியுங்கள். ‘முற்போக்கு புத்தகக் காட்சிக்குச் சென்று எல்லா முற்போக்குச் சிந்தனைகள் கொண்ட புத்தகங்களையும் வாங்கிப் படியுங்கள். நவம்பர் 16 வரை நடைபெறும் முற்போக்கு புத்தகக் காட்சியில் தினம்தோறும் கலைநிகழ்ச்சிகளும் முற்போக்குச் சிந்தனையாளர்களின் உரைவீச்சும் இடம்பெறுகின்றன.

பார்ப்பதற்கும் படிப்பதற்கும் கேட்பதற்குமான மகத்தான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 2026 தேர்தலில் மட்டுமல்ல, 2000 ஆண்டுக் கால ஆதிக்கத்தை எதிர்க்கும் போராட்டத்திலும் நாம் தான் வெல்வோம் என்பதை நிரூபிக்கட்டும் இந்த அறிவுத்திருவிழா. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : knowledge festival ,2026 elections ,year ,Udhayanidhi Stalin ,Chennai ,2000-year-old ,Youth Wing Secretary ,Deputy Chief Minister ,
× RELATED திராவிட மாடல் ஆட்சியில் 34 லட்சம்...