×

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்கள், ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் சமர்ப்பிக்க தமிழ்நாடு அரசுக்கு மேலும் 10 நாள் அவகாசம்: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு

சென்னை: கரூரில் கடந்த செப்டம்பர் 27ம் தேதி, த.வெ.க. தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தை தொடர்ந்து, அரசியல் கட்சி தலைவர்களின் ரோடு ஷோ நிகழ்ச்சிகளுக்கு வழிகாட்டு விதிமுறைகள் வகுக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றம், வழிகாட்டு விதிமுறைகளை 10 நாட்களில் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன், மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, தவெக சார்பில் வழக்கறிஞர் அறிவழகன், தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் வழக்கறிஞர் ஏ.பி.சூரியபிரகாசம் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் வாதிடும்போது, வரைவு வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து நவம்பர் 6ம் தேதி அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கொண்டுள்ள 20க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்துக்களை வழங்கியுள்ளனர். தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள 40க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு வரைவு வழிகாட்டு விதிமுறைகள் அனுப்பி வைக்கப்பட்டு, அவர்களின் கருத்துக்கள் கோரப்பட்டுள்ளது. இந்த கருத்துக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி இறுதி வரைவு வழிகாட்டு விதிமுறைகளை வகுக்க ஒரு மாத கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரினார்.

அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி, ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு விதமாக நிபந்தனைகள் விதிக்கப்படுகிறதா?. கடைசி நேரத்தில் அனுமதி வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகளுக்கு பொதுக்கூட்டம், ரோடு ஷோக்களுக்கு அனுமதி வழங்கும்போது தேவையில்லாத நிபந்தனைகளை விதிக்க கூடாது. 15 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிக்கும் பட்சத்தில் 5 முதல் 7 நாட்களில் முடிவெடுத்து தெரிவிக்க வேண்டும். அனைத்து கட்சிகளின் கருத்துக்களும் அரசின் வசம் உள்ள நிலையில் பதிவு செய்யப்பட்ட கட்சிகளான தவெ.க. மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சியின் சார்பில் வரைவு வழிகாட்டு விதிமுறைகள் குறித்த யோசனைகளை உடனடியாக அரசுக்கு அனுப்ப வேண்டும்.

இந்த யோசனைகளை பரிசீலித்து பத்து நாட்களில், நவம்பர் 20ம் தேதி வரைவு வழிகாட்டு விதிமுறைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர். இதற்கிடையில், வழிகாட்டு விதிமுறைகள் வகுக்க வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நிர்வாகி தாக்கல் செய்த மனுவையும், வழக்கறிஞர் ஒருவர் தாக்கல் செய்த மனுவையும் ஏற்க தலைமை நீதிபதி அமர்வு மறுத்துவிட்டது. விசாரணையின்போது, தவெக கட்சி தொண்டர்கள் டிரான்ஸ்பார்மர்களில் ஏறக்கூடாது என்று நிபந்தனை விதிக்கப்பட வேண்டும் என்று கூடுதல் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார்.

Tags : Tamil Nadu government ,Madras High Court ,Chief Justice ,Chennai ,T.V.K. ,Vijay ,Karur ,Chennai High Court ,
× RELATED திண்டிவனம் அருகே மரத்தின் மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் பலி!