×

தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 525 கலைஞர்களுக்கு நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

சென்னை: தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் கீழ், 525 கலைஞர்களுக்கு ரூ.85 லட்சம் நிதியுதவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் கலைமாமணி விருது பெற்று நலிந்த நிலையில் வாழும் டி.ஜி.ரத்தினம், கே.எஸ்.கிருஷ்ணப்பா, கே.ஏ.சத்தியபாலன், எஸ்.முத்துக்குமார், எஸ்.சுப்ரமணியன், ஏ.முத்துலெட்சுமணராவ், ஏ.பி.அய்யாவு, ஏ.ராஜகிளி, ஆர்.கே.விசித்ரா, எம்.திருச்செல்வம் ஆகிய 10 கலைஞர்களுக்கு பொற்கிழித் தொகையாக தலா ரூ.1 லட்சம் ரூபாய் வழங்கிடும் அடையாளமாக 4 கலைமாமணி விருதாளர்களுக்கு பொற்கிழிக்கான காசோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

தமிழில் கருத்தாழமிக்க அரிய கலைகள் சார்ந்த நூல்களை பதிப்பிக்க மோ.பாட்டழகன், கி.அய்யப்பன், ஜே.ஆர்.லட்சுமி, க.வெங்கடேசன், சித்ரா கோபிநாத் ஆகிய 5 நூலாசிரியர்களுக்கு தலா ரூ.2 லட்சம் மற்றும் தமிழில் புதிய நாடகங்கள் மற்றும் நாட்டிய நாடகங்கள் தயாரித்து மேடையேற்றம் செய்திட 5 நாடக கலைஞர்களுக்கும், 5 நாட்டிய கலைஞர்களுக்கும் தலா ரூ.1.50 லட்சம் நிதியுதவிக்கான ஆணைகளை முதல்வர் வழங்கினார். நாட்டுப்புற கலைஞர்களுக்கு இசைக் கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்குவதற்கு 500 நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கிடும் அடையாளமாக 5 கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் என தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் ரூ.85 லட்சத்துக்கான நிதியுதவி 525 கலைஞர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தலைமை செயலாளர் முருகானந்தம், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை செயலாளர் மணிவாசன், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் மற்றும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் வாகை சந்திரசேகர், கலை பண்பாட்டு துறை இயக்குநர் வளர்மதி, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளர் விஜயா தாயன்பன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,MK Stalin ,Tamil Nadu Iyal Isai Natak Mandram ,Chennai ,Tamil Nadu Iyal ,Isai Natak ,Mandram ,
× RELATED காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில்...