×

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல்; பாஜக கூட்டணி 120 – 140 ‘இந்தியா’ கூட்டணி 93 – 112: கருத்துக்கணிப்பில் இழுபறி நீடிப்பதால் பரபரப்பு

புதுடெல்லி: பீகார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக – இந்தியா கூட்டணி இடையே கடும் போட்டி இருப்பதாக கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பீகாரில் உள்ள 243 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 14ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (தே.ஜ.கூ.) ஆட்சியைத் தக்கவைக்குமா அல்லது தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைமையிலான இந்தியா கூட்டணி ஆட்சியை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில், ‘டைம்ஸ் நவ்’ தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜேவிசி’ நிகழ்ச்சியின் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன. இந்தக் கருத்துக்கணிப்பின்படி, தேசிய ஜனநாயகக் கூட்டணி 120 முதல் 140 இடங்களைக் கைப்பற்றி அதிக முன்னிலையுடன் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா கூட்டணி 93 முதல் 112 இடங்கள் வரை வெல்ல வாய்ப்புள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில், பாஜக 70 முதல் 81 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் 42 முதல் 48 இடங்களையும் கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) 5 முதல் 7 இடங்களிலும், ஹிந்துஸ்தானி அவாமி மோர்ச்சா 2 இடங்களிலும், ராஷ்ட்ரிய லோக் மோர்ச்சா 1 முதல் 2 இடங்களிலும் வெற்றி பெற வாய்ப்புள்ளது.

அதேபோல், ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான இந்தியா கூட்டணியில், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 69 முதல் 78 இடங்களையும், காங்கிரஸ் 9 முதல் 17 இடங்களையும், இடதுசாரிக் கட்சிகள் (சிபிஐ (எம்எல்), சிபிஐ, சிபிஎம்) அனைத்தும் சேர்ந்து 14 முதல் 17 இடங்களையும் கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஜன் சுராஜ் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெற்று தனது கணக்கைத் தொடங்கலாம் என்றும், ஏஐஎம்ஐஎம், பகுஜன் சமாஜ் மற்றும் பிற கட்சிகள் 8 முதல் 10 இடங்களைக் கைப்பற்றலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கட்சிகளின் வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, தேசிய ஜனநாயகக் கூட்டணி 41% முதல் 43% வரையிலான வாக்குகளைப் பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. இது இந்தியா கூட்டணியின் 39% முதல் 41% வரையிலான வாக்கு சதவீதத்தை விட சற்றே அதிகம். மேலும், ஜன சுராஜ் கட்சி 6% முதல் 7% வாக்குகளையும், மற்ற கட்சிகள் 10% முதல் 11% வரையிலான வாக்குகளையும் பெறும் என கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இரு கூட்டணிகளுக்கும் முன்னிலை விகிதங்களில் அதிக வித்தியாசம் இருந்தாலும் கூட, வாக்கு சதவீத வித்தியாசம் மிகவும் குறைவாக இருப்பதால், பீகார் தேர்தல் களம் மிகக் கடுமையான போட்டியை சந்தித்துள்ளது.

Tags : BIHAR STATE ,ELECTION ,BJP ALLIANCE ,INDIA ,New Delhi ,BJP ,India alliance ,Bihar ,
× RELATED அமித்ஷா அவர்களே, நீங்கள் அல்ல.. உங்கள்...