×

‘பணம் வாங்கிக்கொண்டு பதவி போடுறாங்க…’ பட்டியலின மக்களை இழிவாக பேசும் தவெக மாவட்ட செயலாளர்: ஆலோசனை கூட்டத்தில் பெண் நிர்வாகி ஆவேசம்; வீடியோ வைரல்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மேற்கு மாவட்ட தவெக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் கீழ்பென்னாத்தூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர் கதிரவன் தலைமையில் நடந்துள்ளது. அப்போது, அந்த கூட்டத்தில் மகளிர் அணி நிர்வாகி மேனகா என்பவர் பேசுவதற்கு வாய்ப்பு கேட்டுள்ளார். ஆனால், வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. அதனால், ஆத்திரம் அடைந்த மேனகா, ஆவேசமாக மேடையேறி மைக்கை பிடுங்கி பேசியுள்ளார். அப்போது, ரசிகர் மன்றம் தொடங்கியதில் இருந்து இருப்பவர்களுக்கு கட்சியில் பதவி கிடைக்கவில்லை. ஒன்றரை லட்சம் வாங்கிக்கொண்டு மாவட்ட செயலாளர் கதிரவன் தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு சாதி பார்த்து பதவி போடுகிறார் என ஆவேசமாக பேசியுள்ளார்.

அதோடு, சாதி பார்த்து நியமனம் நடைபெறுவதாகவும், பட்டியல் இனத்தவர்களை சாதி பெயரை சொல்லி இழிவாக மாவட்ட செயலாளர் பேசுவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். மாநாட்டுக்காக ஆட்களை கூட்டிச் சென்றேன். விஜய் வீட்டுக்கு நேரில் சென்றும் புகார் அளித்திருக்கிறேன் என்றும் பேசியுள்ளார். அதனால், கூட்டத்தில் சலசலப்பும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது, அதைத்தொடர்ந்து, அவசர அவசரமாக கூட்டத்தை முடித்துக்கொண்டு மாவட்ட செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் மண்டபத்தில் இருந்து வெளியேறி உள்ளனர். ஆனாலும், அவர்களை விடாமல் விரட்டிச் சென்ற பெண் நிர்வாகி மேனகா, பதில் சொல்லிவிட்டு செல்லுங்கள், ஏன் ஓட்டம் பிடிக்கிறீர்கள் என கூச்சலிட்டுள்ளார். ஆனாலும், நிர்வாகிகள் யாரும் பதில் அளிக்காமல் வெளியேறி உள்ளனர். இந்த பரபரப்பான காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி உள்ளது.

Tags : Daweka District ,Tiruvannamalai ,Thiruvannamalai ,West ,District ,Daveka ,Kalbenathur ,Akkatsi Katrawan ,Manga ,
× RELATED நீதிபதிகள் மதச்சார்போடு செயல்படக்...