×

உயர்கல்வியில் தமிழ்நாடு சிறந்து விளங்க அடித்தளமிட்டவர் கலைஞர்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

 

சென்னை: பாரதிதாசன் மேலாண்மைக் கல்வி நிறுவனத்தின் 33வது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று மாணவ, மாணவியருக்கு பட்டங்கள் மற்றும் பதக்கங்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் 21 பேர் 38வது பட்டப் பிரிவின் கீழும், 8 பேர் 39 வது பட்டப் பிரிவின் கீழும் நேற்று நேரடியாக பட்டங்களை பெற்றனர். தொடர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்தியாவில் உயர்கல்வியில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. உயர்கல்வி சேர்க்கையில் என்ஐஆர்எஸ்சில் பல குறியீடுகளை தமிழ்நாடு பெற்றுள்ளது. இப்படி உயர்கல்வியில் சிறந்து விளங்க யார் காரணம். திராவிட இயக்கம்தான். இந்த அடித்தளத்தை அமைத்தவர் கலைஞர்தான். உயர்கல்விக்காக அதிகம் செய்தவர் அவர்தான். அதன் தொடர்ச்சியாக இந்த திராவிட மாடல் அரசும் பல முன்னணி திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.

பல புத்தகங்களை படிப்பதை விட, எல்லாவற்றுக்கும் பொருத்தமாக இருக்கும் மேலாண்மை பாடங்கள் திருக்குறளில் இருக்கிறது. எந்த துறையிலும் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக, ‘அறிவுடையார் ஆவது அறிவார்’ என்கிறார் திருவள்ளுவர். இந்த திறமை இல்லாதவர்கள் ஒரு கட்டத்தில் முடங்கிவிடுவார்கள். சாதக பாதங்களை யோசிக்காமல் சரியான திட்டம் இல்லாமல் இறங்கினால் பாதிப்புதான். அதனால் ‘எண்ணித் துணிக கருமம்’ என்கிறார் வள்ளுவர். எவ்வளவு பெரிய சிந்தனையாக இருந்தாலும் நேரம், காலம் முக்கியம்.

அதைத் தான் காலம் அறிந்து செயல் வேண்டும் என்றும் கூறுகிறார். அப்படி செய்தால் தான் முடிக்க முடியும். சரியான நபரை போட்டால் தான் அதில் வெற்றிபெற முடியும் என்பதற்காக ‘இதனை இதனால் இவன் முடிக்கும்’ என்கிறார். பல புதிய நிறுவனங்களை நீங்கள் உருவாக்க வேண்டும். இதுதான் என் ஆசை மற்றும் கனவாக இருக்கிறது. பல முன்மாதிரிகளை பார்த்து வளரும் நீங்கள் மற்றவர்களுக்கும் நீங்கள் முன்மாதிரியாக இருங்கள். பெரிய அளவில் கனவு காணுங்கள், கடுமையாக உழையுங்கள், எளிமை மற்றும் இரக்கத்துடன் இருக்க வேண்டும். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags : Tamil Nadu ,Chief Minister ,M.K. Stalin ,Chennai ,33rd convocation ceremony ,Bharathidasan Institute of Management Education ,
× RELATED அடையாறு – மாமல்லபுரம் இடையே டபுள்...