×

ஆந்திராவின் காக்கி நாடா அருகே மோன்தா புயல் தீவிர புயலாக கரையை கடக்கும்: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

 

டெல்லி: ஆந்திராவின் காக்கி நாடா அருகே மோன்தா புயல் தீவிர புயலாக கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மசூலிப்பட்டினம் -கலிங்கபட்டினம் இடையே அக். 28 ஆம் தேதி மோன்தா புயல் கரையை கடக்கும். கடந்த 3 மணிநேரத்தில் மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நகர்கிறது. சென்னைக்கு 970 கி.மீ. கிழக்கு தென்கிழக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. புயல் கரையை கடக்கும் சமயத்தில் 90 – 100 கி.மீ. வேகத்தில் இடையிடையே 110 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள், அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழையின் முதல் நிகழ்வு வங்கக்கடலில் உருவாகி, வடமாவட்டங்களில் சில இடங்கள், டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட சில பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது.

தென்கிழக்கு வங்கக்கடலில் நேற்று (அக்டோபர் 24) உருவான புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, விரைவாக வலுவடைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐஎம்டி) வெளியிட்ட அறிக்கையின்படி, தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள மேல் காற்று சுழற்சி காரணமாக இந்தத் தாழ்வு உருவானது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்.

அது மேற்கு- வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, இன்று (சனிக்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், நாளை (ஞாயிற்றுக்கிழமை) தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் வலுப்பெறக்கூடும் எனவும், அதனையடுத்து அது 27 ஆம் தேதி (திங்கட்கிழமை) புயலாகவும் வலுவடையும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இதன் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 28ம் தேதி வரை, இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் நாளை கனமழை பெய்யக்கூடும்.

வரும் 27 ஆம் தேதி, திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. வரும் 28 ஆம் தேதி, திருவள்ளூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.

வங்கக்கடலில் உருவாகும் மோன்தா புயல் ஆந்திராவை நோக்கி நகரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆந்திராவின் மச்சிலிப்பட்டணம் – விசாகப்பட்டினம் இடையே நாளை மறுநாள் மோன்தா புயல் கரையை கடக்க வாய்ப்புள்ளது. புயல் ஆந்திராவை நோக்கி நகர்ந்தாலும் நாளை மறுநாள் மற்றும் 28-ந்தேதி சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Storm Monta ,Khaki Nada ,Andhra ,Indian Meteorological Survey Centre ,Delhi ,Khaki Nada, Andhra ,Masulipatnam - ,Kalingapatnam ,
× RELATED தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள கட்சிகளை ஒருங்கிணைக்க அமித் ஷா உத்தரவு