×

நியூசி.யை வீழ்த்தி அரையிறுதிக்கு இந்தியா தகுதி; பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சில் முன்னேற்றம் தேவை: கேப்டன் ஹர்மன்பிரீத் பேட்டி

 

மும்பை: 13வது மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. 8 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் மும்பை டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த 24வது லீக் போட்டியில் இந்தியா-நியூசிலாந்து மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்ய முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 49 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 340 ரன் குவித்தது. பிரதிகா ராவல் 122, ஸ்மிருதி மந்தனா 109, ஜெமிமா ரோட்ரிக்ஸ் நாட் அவுட்டாக 76 ரன் விளாசினர். பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்துக்கு மழை இடையூறு காரணமாக 44 ஓவரில் 325 ரன் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த அணி 8 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்களே எடுத்தது. இதனால் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி இந்தியா 53 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

மந்தனா ஆட்டநாயகி விருது பெற்றார். 6வது போட்டியில் 3வது வெற்றிபெற்ற இந்தியா 4வது அணியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றது. வெற்றிக்கு பின் இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் கூறுகையில், “இந்த வெற்றி எளிதானதல்ல. நாங்கள் போராடிய விதத்திற்கான பாராட்டு முழு அணிக்கும் உரியது. இந்த ஆட்டம் எவ்வளவு முக்கியமானது என்பதை அறிந்திருந்தோம். முழு அணியும் உற்சாகமாக இருந்தது. இன்று நாங்கள் விளையாடிய விதத்தில் மகிழ்ச்சி. தொடரில் நாங்கள் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் துரதிர்ஷ்டவசமாக, அதை பெரிதாக்க முடியவில்லை. பொறுப்பை ஏற்றுக்கொண்ட விதத்திற்கான பாராட்டு ஸ்மிருதி மற்றும் பிரதிகாவுக்குச் சொந்தமானது. இன்று மிகச் சிறந்த தொடக்கம் கிடைத்தது. அவர்கள் இருவரும் பார்ட்னர்ஷிப்பில் 200 ரன் எடுத்தபோது, ​​ஜெமியை 3வதாக அனுப்பினோம்.

அவர் பேட்டிங் செய்த விதத்தை தான் நாங்கள் எதிர்பார்த்தோம். ரசிகர்கள் எங்களை எப்போதும் உற்சாகப்படுத்துகின்றனர். இது நம் மீது அழுத்தம் கொடுப்பதைவிட இது ரசிக்க வேண்டிய தருணம். நாங்கள் செயல்பட்ட விதம் மிகவும் மகிழ்ச்சி. பேட்டிங் சிறப்பாக இருந்தாலும் பந்துவீச்சில் முன்னேற்றம் அவசியம்’’ என்றார். இந்தியா கடைசி லீக் போட்டியில் வரும் 26ம் தேதி வங்கதேசத்துடன் மோத உள்ளது.

Tags : Newsy ,India ,Y ,Captain Harmanprey ,Mumbai ,13th Women's World Cup cricket ,Sri Lanka ,Mumbai T. Y. India ,New Zealand ,Patil Stadium ,
× RELATED ஐசிசியின் நவம்பர் மாத சிறந்த வீரர், வீராங்கனைக்கான விருது அறிவிப்பு!