×

கலைஞர் பல்கலை. மசோதா ஒப்புதல் வழக்கு ஜனாதிபதி வழக்கின் தீர்ப்புக்கு பின் விசாரணை: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு

புதுடெல்லி: கும்பகோணத்தில் கலைஞர் பல்கலைக்கழகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்து, அதற்கான சட்ட மசோதா கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவின்படி, முதலமைச்சர் வேந்தராகவும், உயர்கல்வித் துறை அமைச்சர் இணைவேந்தராகவும் செயல்படுவார்கள் என்றும், தேடுதல் குழு மூலம் துணைவேந்தர் நியமிக்கப்படுவார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மசோதா, ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அவர் அதனை குடியரசுத் தலைவரின் முடிவுக்கு அனுப்பி வைத்தார். ஆளுநரின் இந்த நடவடிக்கை, சட்டமன்றத்தின் இறையாண்மைக்கு எதிரானது எனக் கூறி, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ‘கடந்த 2015ம் ஆண்டு முதல் 381 மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். ஒவ்வொரு மசோதாவுக்கும் தொடர்பாக மாநில அரசுகள் நீதிமன்றத்தை எதற்காக நாட வேண்டும்? குடியரசு தலைவர் ஒவ்வொரு மசோதாவிற்கும் சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுப்பார்’ என்று வாதிட்டார். இதனைக் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, ‘ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவர் எழுப்பிய 14 கேள்விகள் அடங்கிய வழக்கின் தீர்ப்பு நிலுவையில் உள்ளது. வரும் நவம்பர் 21ம் தேதி அந்த வழக்கிற்கு தீர்ப்பு வரட்டும். அதன்பிறகு, இந்த வழக்கை விசாரித்து முடிவெடுக்கப்படும்’ என்று கூறி, விசாரணையை ஒத்தி வைத்தது.

Tags : Kalaignar University ,Bill ,Supreme Court ,Chief Justice ,New Delhi ,Tamil Nadu government ,Kumbakonam ,
× RELATED டிசம்பர் மாதத்தில் கூடுதலாக 275...