×

கோழியை துப்பாக்கியால் சுட்டபோது தலையில் குண்டுபாய்ந்து வாலிபர் பரிதாப பலி: விவசாயி கைது

கள்ளக்குறிச்சி: கல்வராயன்மலையில் நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டபோது பக்கத்து வீட்டு வாலிபர் தலையில் குண்டுபாய்ந்து அவர் பலியானார். இது தொடர்பாக விவசாயியை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை பகுதிக்கு உட்பட்ட வெள்ளிமலை ஊராட்சி நடுமதூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (40). விவசாயி. இவர் நேற்றிரவு 9.30 மணி அளவில் தனது மகனுக்கு கோழி அடித்து குழம்பு வைப்பதற்காக தனது வீட்டில் சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்த நாட்டு துப்பாக்கியால் கோழியை சுட்டுள்ளார். அப்போது பக்கத்து வீட்டில் வசித்து வந்த பிச்சை மகன் பிரகாஷ் (25) என்பவரது தலையில் எதிர்பாராதவிதமாக துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இதில் ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுபற்றி அப்பகுதி மக்கள் கரியாலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் துப்பாக்கியால் சுட்ட அண்ணாமலையை கைது செய்து காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்த பிரகாஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முன்விரோதம் காரணமாக வாலிபர் பிரகாஷ் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : KALLAKURICHI ,KALVARAYANMALA ,Silvimalai Uratsi ,Kalvarayanmalai ,Kalvarayanmalai, Kalkurichi District ,
× RELATED தொழிலாளியிடம் செல்போன் பறிப்பு – மூவர் கைது