×

திருமண ஆசை காட்டி ஏமாற்றி பலாத்காரம்; மகளிர் ஆணையம் புகாரை ஏற்றும் உ.பி. எம்பி மீது நடவடிக்கை இல்லை: தற்கொலை மிரட்டலால் பரபரப்பு

லக்னோ: திருமண ஆசை காட்டி ஏமாற்றியதாக நாகினா தொகுதி எம்.பி. மீது பெண் முனைவர் அளித்துள்ள பாலியல் புகார் உத்தரபிரதேசத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், நாகினா தொகுதி எம்.பி.யான சந்திரசேகர் ஆசாத் மீது, சுவிட்சர்லாந்தில் வசிக்கும் இந்தூரைச் சேர்ந்த முனைவர் பட்ட ஆராய்ச்சியாளரான டாக்டர் ரோகிணி கவாரி என்பவர் பாலியல் புகார் அளித்துள்ளார். அதில், சந்திரசேகர் ஆசாத் தனக்கு திருமணமானதை மறைத்து, திருமணம் செய்து கொள்வதாகப் பொய்யான வாக்குறுதி அளித்து, பலமுறை தன்னிடம் பாலியல் உறவு கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தனது அரசியல் ஆதாயங்களுக்காகவும், தேர்தல் பிரசாரங்களுக்காகவும் தன்னை உணர்வுப்பூர்வமாகவும், சமூகரீதியாகவும் பயன்படுத்திக் கொண்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து உள்ளூர் காவல் துறை மற்றும் பிரதமர் அலுவலகம் வரை பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தேசிய மகளிர் ஆணையம் இந்தப் புகாரை கடந்த ஜூன் மாதம் இறுதியில் பதிவு செய்துள்ளது. இந்தப் புகாரால், ரோகிணி கவாரி கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்றால், ‘நாடாளுமன்றத்தின் முன்பு குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்வோம்’ என அவரது தாய் நுட்டான் கவாரி மிரட்டல் விடுத்துள்ளார். ஆனால், இந்தப் புகார்களை மறுத்துள்ள சந்திரசேகர் ஆசாத், நீதிமன்றத்தில் இதைச் சந்திப்பதாகக் கூறியுள்ளார். மகளிர் ஆணையம் புகாரைப் பதிவு செய்துள்ள போதிலும், காவல் துறை சார்பில் இதுவரை எந்த மேல்நடவடிக்கையும் உறுதிப்படுத்தப்படாததால், பாதிக்கப்பட்ட பெண்ணும் அவரது குடும்பத்தினரும் தொடர்ந்து ேபாராடி வருகின்றனர்.

Tags : Women's Commission ,UP ,Lucknow ,Nagina ,Uttar Pradesh ,Chandrashekhar Azad ,Indore ,Switzerland ,
× RELATED ஆம் ஆத்மி ஊர்வலத்தில் துப்பாக்கிச்...