×

தாயின் போராட்டத்தால் 2 மாதங்களுக்கு பின் துப்பு துலங்கியது: ‘லிவ்இன்’ காதலியை கொன்று ‘செல்பி’ எடுத்த காதலன்

கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ‘லிவ்இன்’ காதலியை கொன்று சூட்கேசில் அடைத்து சடலத்துடன் ‘செல்பி’ எடுத்த காதலன் மற்றும் அவரது நண்பரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் கான்பூரைச் சேர்ந்த சூரஜ் குமார் உத்தம் என்பவர் அதே பகுதியைச் சேர்ந்த ஆகான்ஷா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி காதலித்து வந்துள்ளார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் (லிவ்இன்), ஹனுமந்த் விகார் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 8ம் தேதி ஆகான்ஷாவின் தாய், தனது மகளைக் காணவில்லை என்றும், சூரஜ் உத்தம் தான் தனது மகளைக் கடத்திச் சென்றிருக்க வேண்டும் என்றும் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். முதலில், ஆகான்ஷா தனது காதலனுடன் வீட்டை விட்டு ஓடிச் சென்றிருக்கலாம் என காவல்துறை சந்தேகித்தது. ஆனால், அவரது தாய் தொடர்ந்து விடாப்பிடியாக காவல் ஆணையர் வரை சென்று முறையிட்டதால், இந்த வழக்கில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. விசாரணையில், காதலன் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை அளித்தார். ஆனால், அவரது செல்போனின் இருப்பிடம் மற்றும் அழைப்பு விவரங்களை வைத்து காவல்துறையினர் குறுக்கு விசாரணை நடத்தியபோது, அவர் உண்மையை ஒப்புக்கொண்டார்.

தனக்கு வேறு பெண்களுடனும் தொடர்பு இருந்ததாகவும், இது ஆகான்ஷாவிற்குத் தெரியவந்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டதாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். அப்போது அவர், ‘கடந்த ஜூலை 21ம் தேதி சம்பவத்தன்று, ஓட்டலில் இருவருக்கும் ஏற்பட்ட சண்டை வீட்டிலும் தொடர்ந்தது. அப்போது ஏற்பட்ட ஆத்திரத்தில் ஆகான்ஷாவின் தலையை சுவரில் மோதி, பின்னர் கழுத்தை நெரித்துக் கொன்றேன். பின்னர், எனது நண்பரை போனில் அழைத்து, ஆகான்ஷாவின் உடலை ஒரு சூட்கேசில் அடைத்து, இருசக்கர வாகனத்தில் சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள பாண்டாவிற்கு எடுத்துச் சென்று, சில்லா பாலத்திலிருந்து யமுனை ஆற்றில் வீசினேன்.

யமுனை ஆற்றில் சடலத்தை வீசுவதற்கு முன்பாக அந்த உடலுடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்ேடன்’ என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அவரது வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த கொடூர கொலைக்கு உதவிய ஃபதேபூரைச் சேர்ந்த அவரது நண்பரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இதையடுத்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இந்த கொலை வழக்கில் துப்பு துலங்கியுள்ள நிலையில் போலீசார் சடலத்தை தேடி வருகின்றனர்.

Tags : Kanpur ,Uttar Pradesh ,Suraj Kumar Uttam ,
× RELATED திருவல்லிக்கேணியில் போதை பொருள்...