×

முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிக்கு விழிப்புணர்வு; சென்னை முதல் தனுஷ்கோடி வரை இருசக்கர வாகன பேரணி: துணை முதல்வர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்

சென்னை: முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் அதிகமானவர்கள் பங்கேற்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் தனுஷ்கோடி வரை மேற்கொள்ளும் இருசக்கர வாகன பேரணியை துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். விளையாட்டு போட்டிகளை பார்வையிடும் பார்வையாளராக இல்லாமல், அனைவரும் போட்டிகளில் பங்கேற்க செய்வதற்காக முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் – 2025 நடத்தப்படவுள்ளன.

இப்போட்டிகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரை பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், தமிழ்நாடு அரசு மற்றும் அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பணியாளர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் ஒன்றிய அரசு பணியாளர்கள் ஆகியோருக்கும் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படவுள்ளது. ரூ.37 கோடி மொத்த பரிசு தொகை கொண்ட 2025ம் ஆண்டு முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்கு இணையதளம் மூலமாக பதிவுகள் நடைபெற்று வருகின்றன. முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் இணையதளம் வாயிலாக தனிநபர் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ள முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு செய்ய கடைசி நாள் இம்மாதம் 20ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்திய பெண்கள் மோட்டார் சங்கம் சார்பில் அதனுடைய தலைவரும் சர்வதேச மோட்டார் பந்தய வீராங்கனையுமான நிவேதா ஜெசிக்கா தலைமையில் சென்னையிலிருந்து புறப்பட்டு தாம்பரம், திண்டிவனம், விழுப்புரம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் ராமேஸ்வரம் வழியாக தனுஷ்கோடி சென்றடைந்து மீண்டும் சென்னை வந்தடைகின்றனர். அதன்படி, சென்னையில் உள்ள முகாம் அலுவலகத்தில் இருந்து துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வீரர், வீராங்கனைகளுக்கு வாழ்த்து தெரிவித்து, இருசக்கர வாகனப் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் மேகநாத ரெட்டி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister's Cup Sports Competition ,wheeler ,Chennai ,Dhanushkodi ,Deputy Chief Minister ,Udhayanidhi Stalin ,Indian Women's Motor Association ,Rameswaram ,
× RELATED செந்தில் பாலாஜி மீதான அமலாக்கத்துறை...