புதுடெல்லி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதால் அதிருப்தி அடைந்த அமெரிக்கா இந்தியாவுக்கு கூடுதலாக 25 சதவீதம் என்று மொத்தம் 50 சதவீத வரியை அறிவித்தது. இதனால் இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் ஏ.எஸ் சஹானி கூறுகையில்,’ ரஷ்யாவிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் கச்சா எண்ணெய் அளவுகள் ஏற்ற இறக்கமாக இருக்குமே தவிர, இறக்குமதி இன்று வரை நிறுத்தப்படவில்லை. ரஷ்யாவின் தள்ளுபடி சலுகைக்கு ஏற்ப இறக்குமதி அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்திலும் இந்த மாதத்திலும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய் இந்திய சுத்திகரிப்பு நிலையங்களுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. நாங்கள் தொடர்ந்து வாங்குகிறோம். இறக்குமதி அளவுகளை அதிகரிக்கவோ குறைக்கவோ எந்த சிறப்பு முயற்சியும் எடுக்கப்படவில்லை’ என்றார்.
