திருப்பூர், ஆக. 14: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 2, 3 மற்றும் 4வது குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சூசையாபுரம் பகுதியில் 4வது குடிநீர் திட்டத்தின் கீழ் பிரதான குழாய்கள் பதிக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. குழாய் பதிப்பு பணி நடைபெறுவதால் அப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளுக்கு குடிநீர் விநியோகம் கடந்த ஒரு வார காலமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் அப்பகுதி பொதுமக்கள் நேற்றைய தினம் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு சென்ற வடக்கு போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் விநியோகம் தடைபட்டதற்கான காரணம் குறித்து பொதுமக்களிடம் தெரிவித்தனர்.
4வது குடிநீர் திட்டத்தின் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருவதனால் பல்வேறு பகுதிகளில் ஏற்கனவே இருந்த குடிநீர் குழாய்கள் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக குடிநீர் விநியோகம் தடைப்பட்டு இருப்பதாகவும், உடனடியாக உடைப்பு ஏற்பட்ட பகுதிகளில் சரி செய்து குடிநீர் வினியோகம் சீர் செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனைதொடர்ந்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்தில் உடைப்பு ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து அதனை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர்.
