சென்னை: சென்னை மாநகராட்சியின் 5 மற்றும் 6வது மண்டலங்களில் தூய்மைப் பணிகளை 276 கோடி ரூபாய்க்கு தனியார் நிறுவனத்துக்கு வழங்கி கடந்த ஜூன் 16ம் தேதி மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் அருகில் தூய்மைப்பணியாளர்கள் 10 நாட்களுக்கும் மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தூய்மைப்பணிகளை தனியாருக்கு வழங்க வகை செய்யும் தீர்மானத்துக்கு தடை விதிக்கக் கோரி உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் அதன் தலைவர் கு.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவில், இரு மண்டலங்களிலும் பணியாற்றும் 2042 நிரந்தர பணியாளர்கள் வேறு மண்டலங்களுக்கு மாற்றப்படுவார்கள். 1953 தற்காலிக பணியாளர்கள் ஒப்பந்த நிறுவன விதிகளின்படி பணியமர்த்தப்படுவார்கள் என்று கூறினாலும், அவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை தொடர்பாக தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொழிலாளர் நீதிமன்ற அனுமதியின்றி, தூய்மைப் பணிகள் தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனால் மாநகராட்சியின் தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி சுரேந்தர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் குமாரசாமி ஆஜராகி, 15 ஆண்டுகள் பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களை குப்பையை போல் தூக்கி எறிந்துள்ளனர். இதை ஏற்க முடியாது. வழக்கு தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருக்கும்போது தனியாருக்கு தாரைவார்க்க முடியாது என்று வாதிட்டார். சென்னை மாநகராட்சி தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், தூய்மைப்பணியாளர்கள் முழுமையாக பாதுகாப்பாக உள்ளனர். அவர்களின் பணி பாதுகாப்பு எந்த பிரச்னையும் வராது. அவர்களுக்கு இஎஸ்ஐ, பி.எப், இன்சூரன்ஸ் உள்ளிட்ட அனைத்து சலுகைகளும் கிடைக்கும் என்றார். தூய்மைப்பணி ஒப்பந்த நிறுவனம் சார்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, பணியில் சேர்வதற்கு ஆகஸ்ட் 31ம் ேததி கடைசி என்றார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
