×

கூடுதல் வரி விதிப்பால் வர்த்தக மோதல் நீடிக்கும் சூழலில் பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா பயணம்: ஐநா பொதுசபையில் 26ம் தேதி மோடி உரை

ஐநா: அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் இந்தியா -அமெரிக்கா இடையே வர்த்தக மோதல் நீடிக்கும் நிலையில் பிரதமர் மோடி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல உள்ளார். அமெரிக்க அதிபராக டிரம்ப் 2ம் முறையாக பதவி ஏற்ற நாள்முதலே இந்தியாவுக்கு எதிரான பல்வேறு அறிவிப்புகளை வௌியிட்டு வருகிறார். மேலும் உலகிலேயே இந்தியாதான் அமெரிக்க பொருள்களுக்கு அதிக வரி விதிப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதையடுத்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படும் என கடந்த மாதம் 31ம் தேதி அறிவித்தார்.

இந்த கூடுதல் வரி விதிப்பு ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்திருந்தார். அத்துடன் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய், ஆயுதங்களை வாங்கும் இந்தியாவுக்கு அபராதமும் விதிப்பதாக டிரம்ப் மிரட்டல் விடுத்திருந்தார். டிரம்பின் அறிவிப்பால் அதிர்ச்சியடைந்த ஒன்றிய அரசு, அமெரிக்காவுடன் விரைவில் இடைக்கால வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவின் இந்த அறிவிப்பால் சமாதானம் அடையாத டிரம்ப், இந்தியா மீது மேலும் 25 சதவீத கூடுதல் வரியை விதித்துள்ளார். இந்த 50 சதவீத வரி உயர்வு வரும் 27ம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது.

இந்த சூழலில் ஐக்கிய நாடுகள் அவையின் 80வது பொதுசபை கூட்டம் அடுத்த மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. இதன்ஒரு பகுதியாக உலக தலைவர்கள் பங்கேற்கும் விவாதம் செப்டம்பர் 23ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி அடுத்த மாதம் 23ம் தேதி அமெரிக்கா செல்ல உள்ளார். ஐநா பொதுசபை விவாதங்களில் உரையாற்ற உள்ள தலைவர்களின் பட்டியல் வெளியாகிஉள்ளது. அதன்படி, அமெரிக்க அதிபர் டிரம்ப் விவாதத்தின் முதல்நாளான 23ம் தேதி உரையாற்றுகிறார். அமெரிக்க அதிபராக 2ம் முறை பதவியேற்ற டிரம்ப், முதன்முறையாக ஐநா சபையில் உரையாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பிரதமர் மோடி செப்டம்பர் 26ம் தேதி உரையாற்றுகிறார். அதேநாளில் இஸ்ரேல், சீனா, பாகிஸ்தான் மற்றும் வங்கதேச நாடுகளின் தலைவர்கள் உரையாற்ற உள்ளனர். இந்த பயணத்தின்போது அமெரிக்க அதிபர் டிரம்ப், உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி உள்ளிட்டோரை பிரதமர் மோடி சந்தித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா மீதான அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் ஏற்பட்டுள்ள பதற்றம், இந்தியா அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்தும் அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : Modi ,US ,UN General Assembly ,UN ,India ,Trump ,President ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...