திருப்பூர், ஆக. 13: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாரங்களிலும் குறு மைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலும் தனிநபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில் தடகள போட்டிகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் வடக்கு குறுமைய அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்று நிறைவடைந்துள்ள நிலையில் அவினாசி குறுமைய அளவிலான தடகள போட்டிகள் திருப்பூர் சிக்கண்ணா கலைக்கல்லூரி வளாகத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மைதானத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் அவிநாசி தாலுகாவைச் சேர்ந்த ஏராளமான பள்ளியைச் சேர்ந்த சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர். 400 முதல் 3 ஆயிரம் மீட்டர் வரையிலான ஓட்டப்பந்தயம், ஈட்டி எறிதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்ட மாணவ- மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இதில் வெற்றி வரும் மாணவ- மாணவிகள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
