- அமைச்சர்
- திருப்பூர்
- தேசிய குடற்புழு நீக்க தினம்
- சுகாதாரம் மற்றும் பொது சுகாதார அமைச்சர்
- எம் சுப்பிரமணியன்
- அரசு மேல்நிலைப்பள்ளி
- அனுப்பர்பாளையம், திருப்பூர்
திருப்பூர், ஆக. 12: தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு திருப்பூர், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கினார்.நிகழ்ச்சிக்கு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார் தலைமை வகித்தார். மாவட்ட கலெக்டர் மனீஷ், மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் அமித் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தேசிய குடற்புழு நீக்க நாளினை முன்னிட்டு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை வழங்கி பேசியதாவது:
குடற்புழு என்பது கையை சரியாக சுத்தம் செய்யாமல் இருப்பதாலும், 5 முதல் 45 சதவீதம் பேருக்கு மண்ணின் மூலமாக இந்த குடற்புழு பரவி வருகிறது. அதனால் திறந்த வெளியில் மலம் கழிப்பதை தவிர்க்க வேண்டும். அதேபோல் அசுத்தமான கைகள், சுகாதாரமற்ற உணவுகள், குழந்தைகளுக்கு காலணி அணியாமல் இருப்பது போன்றவற்றை சரியாக கவனிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்த குடற்புழு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தமிழ்நாட்டை பொறுத்த வரை 1 வயது முதல் 19 வயதுள்ள 2 கோடியே 1 இல்லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது. அதே போல 20 வயது முதல் 30 வயதுடைய 50 லட்சத்து 70 ஆயிரம் மகளிர்களுக்கு குடற்புழு மாத்திரைகளை கொடுக்கப்படுகிறது. 1 வயது முதல் 2 வயதுடைய குழந்தைகளுக்கு அரை மாத்திரையும், 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு முழு மாத்திரைகளும் வழங்கப்படுகிறது.
இந்த மாத்திரை உட்கொள்வதால் ரத்தசோகை இருக்காது, அறிவுத்திறன் வளரும், ஞாபக சக்தி வளரும், உடல் வலிமை அதிகரிக்கும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எனவே குடற்புழு மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த குடற்புழு நீக்க நிகழ்ச்சிக்காக தமிழ்நாடு முழுவதும் 54 ஆயிரத்து 400 அங்கன்வாடி பணியாளர்கள், 61 ஆயிரத்து 900 பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், 6,595 மருத்துவர்கள், 11 ஆயிரம் கிராமப்புற செவிலியர்கள், 2,650 ஆஷா பணியாளர்கள், 1 லட்சத்து 36 ஆயிரத்து 545 நபர்கள் பணியில் ஈடுபடவுள்ளனர். எனக்கூறினார். அரசின் திட்டங்கள் குறித்து சரியாக பதிலளித்த மாணவர்களுக்கு பரிசுத்தொகை வழங்கி பாரட்டினார். பல்வேறு கலை நிகழ்ச்சிகளை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில், துணை மேயர் பாலசுப்பிரமணியன், இயக்குநர், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சோமசுந்தரம், மாவட்ட சுகாதார அலுவலர் ஜெயந்தி, முதல்வர், மாநகர நல அலுவலர் முருகானந்த், திருப்பூர் மாநகராட்சி சுகாதாரக்குழுத்தலைவர் கவிதா ஜோதி கண்ணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், மருத்துவர்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
