வெள்ளகோவில், ஆக. 12: ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்கு கடந்த 31ம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர், 9ம் தேதி மாலை 124வது மைல் பகுதியில் உள்ள கடைமடை பகுதிக்கு வந்தடைந்ததை தொடர்ந்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.ஈரோடு, திருப்பூர், கரூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் உள்ள 1 லட்சத்து 3,500 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் வகையில் பவானிசாகர் அணையில் இருந்து ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல்போக நஞ்சை பாசனத்திற்கு கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் பாசனத்துக்கு திறக்கப்படுவது வழக்கம். ஆகஸ்ட் 15 முதல் டிசம்பர் 12 வரை 135 நாட்கள் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்டும்.
அந்த வகையில் நடப்பு ஆண்டும் கடந்த 31ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. நீர்கசிவின் காரணமாக தண்ணீர் குறைக்கப்பட்டது பின்பு சரி செய்யப்பட்ட பின் மீண்டும் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீரானது, 124வது மைலில் உள்ள மங்களப்பட்டி ஷட்டர் பகுதிக்கு 9ம் தேதி மாலை வந்தடைந்தது. இதையடுத்து இப்பகுதி விவசாயிகள் மலர்தூவி தண்ணீரை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர். இந்த ஷட்டர் பகுதியில் தண்ணீர் மூன்றாக பிரிகிறது. இதில் மங்களப்பட்டிக்கும், ஈரோடு மாவட்டம் அஞ்சூர் பகுதிக்கும், கரூர் மாவட்டம் மொஞ்சனூர் பகுதிக்கும் பாசனத்துக்கு செல்கிறது.
