×

பல்லடம் கடைவீதியில் நாளை கடைஅடைப்பு

பல்லடம், ஆக. 12: பல்லடம் கடைவீதியில் 13ம் தேதி கடைஅடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்க தலைவர் ஆனந்தா செல்வராஜ், செயல் தலைவர் பானு பழனிசாமி, செயலாளர் விமல் பழனிசாமி, பல்லடம் அனைத்து வணிகர் சங்க தலைவர் ராம்.கண்ணையன், மாவட்ட ஆலோசகர் அண்ணாதுரை, செயலாளர் செல்வராஜ் ஆகியோர் கூறுகையில்:பல்லடம் என்.ஜி.ஆர் சாலை கடைவீதியில் அனுமதியின்றி வாடகை, வரி எதுவும் இல்லாமல் சிலர் வியாபாரம் செய்வதால் என்.ஜி.ஆர் சாலை தினசரி மார்க்கெட் வியாபாரிகள் வாடகை கட்ட முடியாமல் பாதிக்கப்படுகின்றனர். என்.ஜி.ஆர் சாலையில் அனுமதியில்லாமல் செயல்படும் கடைகளால் கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டுள்ளது. தினசரி மார்க்கெட் வியாபாரிகளின் அடிப்படை வசதிகளான குடிநீர், சுகாதாரமான கழிப்பிடம் மற்றும் தினந்தோறும் குப்பைகளை அகற்றாததால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழக அரசு நகராட்சி கடைகளுக்கு அறிவித்த 5 மாத கொரோனா கால வாடகை தள்ளுபடி செய்திடாமல் பல்லடம் நகராட்சி தற்போது வரை ரூ.32,87,028 வியாபாரிகளுக்கு வழங்காமல் இருந்து வருகிறது.பல்லடம் பேருந்து நிலையத்திற்கு பேருந்துகள் உள்ளே வராமல் வெளியே நின்று செல்வதாலும், ஆவின் பால் கடையில் மற்ற உணவு பொருட்கள் விற்பனை செய்வதாலும், அனைத்து வியாபாரிகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தினசரி மார்க்கெட் கடைகள் இடிக்கப்பட்டு, அக்கடை உரிமையாளர்களுக்கு முன்னுரிமை அளித்து கடை வாடகைக்கு விட வேண்டும் என்ற அரசு ஆணையை பின்பற்றப்படவில்லை. பல்லடம் நகராட்சியின் அதிக வரிவிதிப்பாலும் தமிழகஅரசின் அதிக மின்சார கட்டண உயர்வால் வியாபாரிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அழிந்துவரும் வணிகத்தையும், வியாபாரிகளையும் காப்பாற்ற தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பல்லடம் தாலுகா வியாபாரிகள் சங்கம், பல்லடம் அனைத்து வணிகர் சங்கம் ஆகியவை சார்பில் பல்லடம் நகரில் தினசரி மார்க்கெட் கடைகள், என்.ஜி.ஆர் சாலை கடைகள், பேருந்து நிலைய கடைகள் மட்டும் வரும் நாளை (புதன்) ஒருநாள் அடையாள கடைஅடைப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளது என்று தெரிவித்தனர்.

Tags : Palladam Market Street ,Palladam ,Palladam Taluka Traders' Association ,President ,Ananda Selvaraj ,Executive President ,Banu Palaniswami ,Wimal Palaniswami ,Palladam… ,
× RELATED அதிமுகவில் இருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்