×

நானோ யூரியா தெளிக்க விவசாயிகளுக்கு மானியம்

ராசிபுரம், ஆக.12: ராசிபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் தனலட்சுமி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: ரசாயன உரங்கள் அதிகளவில் பயன்படுத்துவதால், மண்ணின் தன்மை பாதிக்கப்படுவதுடன் நீர் நிலைகளில் கலந்து சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுகிறது. சாதாரணமாக யூரியாவை மண்ணில் அடியுரமாகவோ அல்லது மேலுரமாகவோ இடும்போது, 35% சத்துக்கள் மட்டுமே பயிருக்கு கிடைக்கும். மீதமுள்ள 65% சதவீத சத்துக்கள் நிலத்தடி நீரில் கலந்து மாசுபடுவதுடன் ஆவியாகி வளிமண்டலத்தில் கலந்து வீணாகிறது. சுற்றுச்சூழல் மாசுபடாமல் தவிர்க்கவும், பயிருக்கு அதிகளவில் தழைச்சத்து கிடைக்கவும், தற்சமயம் யூரியாவானது திரவ வடிவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நானோ யூரியாவை 30 லிட்டர் தண்ணீருக்கு 500 மிலி என்ற அளவில் கலந்து தெளிப்பதால் 80 – 90 % பயிருக்கே கிடைக்கிறது. இந்த தழைச் சத்துக்கள் ஒரு மணி நேரத்தில் இலைகளுக்கு சென்று விடும். தேசிய உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் ஊட்டமிகு சிறுதானியங்கள் திட்டத்தில், சிறுதானிய பயிர்களுக்கு இருமுறை நானோ யூரியாவே தெளிக்க 50 சதவீத மானியத்தில் 2 லிட்டர் நானோ யூரியா மற்றும் தெளிப்பு கூலி உட்பட ஒரு ஹெக்டருக்கு ரூ.1700 மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, பகுதி உதவி வேளாண்மை அலுவலர் மற்றும் ராசிபுரம் வேளாண் விரிவாக்கம் மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Rasipuram ,Rasipuram District ,Agriculture Assistant Director ,Thanalakshmi ,
× RELATED முதியவரின் இறுதிச்சடங்கில் டூவீலர் பாய்ந்து 15 பேர் காயம்