உடுமலை, ஆக. 11: உடுமலை அருகே திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. இங்கு தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து குளித்து செல்கின்றனர். மேலும், அடிவாரத்தில் உள்ள அமணலிங்கேஸ்வரர் கோயிலுக்கு வரும் பக்தர்களும் அருவியில் குளித்து செல்கின்றனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
கடந்த நான்கு நாட்களாக தடை நீடித்தது. இந்நிலையில், அருவியில் நேற்று மிதமான அளவில் தண்ணீர் விழுந்ததால் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமையான நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் திருமூர்த்திமலைக்கு வந்திருந்தனர். அவர்கள் ஆனந்தத்துடன் அருவியில் குளித்து மகிழ்ந்தனர். பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
