×

தேர்தல் ஆணைய முறைகேட்டை கண்டுபிடித்தது எப்படி? ராகுல்காந்தி விளக்கம்

தேர்தல் ஆணைய முறைகேட்டை கண்டுபிடித்தது எப்படி என்று ராகுல்காந்தி நேற்று தனது யூடியூபில் விளக்கம் அளித்துள்ளார். அதில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது: உண்மை என்னவென்றால், இந்தியாவில், தேர்தல் ஆணையமும் பாஜவும் தேர்தல்களைத் திருட கூட்டுச் சேர்ந்து செயல்படுகின்றன. முழு ஆதாரமும் கருப்பு வெள்ளையில் அனைவரின் முன்பும் உள்ளது. அவர்களின் திருட்டை நாங்கள் கண்டுபிடித்து விட்டதால் தான் சிறப்பு தீவிர திருத்தம் வந்துள்ளது. இந்தத் திருட்டைச் செய்ய தேர்தல் கமிஷன், பாஜவுடன் வெளிப்படையாக கூட்டுச் சேர்ந்து செயல்படுகிறது.

ஏழைகளின் வாக்குரிமையைப் பறிப்பதே சிறப்பு தீவிர திருத்தத்தின் நோக்கம. எங்களது கண்டுபிடிப்பில் நாங்கள் வாக்காளர் சேர்க்கையை மட்டுமே பார்த்தோம். ஆனால் வாக்காளர் நீக்கங்களின் எண்ணிக்கை வாக்காளர் சேர்க்கையை விட அதிகமாக இருக்கலாம். இது நாட்டிற்கு எதிரான துரோகம். கடந்த 20 ஆண்டுகளாக நானே தேர்தலில் போட்டியிடுகிறேன். சிறிது காலத்திற்கு முன்பு தேர்தல் நடைமுறையில் ஏதோ சந்தேகம் இருப்பதாக நாங்கள் உணர்ந்தோம். தேர்தல் முடிவுகள் மக்கள் மனநிலைக்கு முரணாக இருக்கும். உத்தரகண்டில், நாங்கள் ஏன் தோற்றோம் என்பதை நினைவில் கொள்கிறேன்.

அதே போல் சட்டீஸ்கர், மபி தேர்தலிலும் ஏதோ தவறு இருப்பதை நாங்கள் உணர்ந்தோம். 2023 ஆம் ஆண்டில் மபி தேர்தலில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்பினேன். ஆனால் எங்களுக்கு 65 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இது சாத்தியமற்றது. பின்னர் மகாராஷ்டிரா தேர்தல் வந்தது. மக்களவை தேர்தலுக்கு பின் வந்த புதிய வாக்காளர்களின் வாக்கு பாஜவுக்குச் சென்றது. அவர்கள் வென்றார்கள். எங்களுக்கு சந்தேகம் ஏற்பட்டபோது, எங்கள் கூட்டணி தலைவர்களுடன் நாங்கள் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தினோம். வாக்காளர் பட்டியல் மற்றும் வீடியோ பதிவை எங்களுக்குத் தருமாறு நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்கு வாக்காளர் பட்டியலையோ அல்லது சந்தேகங்களை எழுப்பிய வீடியோ பதிவையோ கொடுக்கவில்லை.

இது தேர்தல் ஆணையம் பாஜவுக்கு உதவுகிறதா என்ற கேள்வியை எங்கள் மனதில் எழுப்பியது. தேர்தல் ஆணையம் தேர்தல்களைத் திருடுவதில் ஈடுபடுகிறதா? நாங்கள் ஒரு குழுவை அமைத்து உண்மையைக் கண்டறிய அவர்களிடம் கேட்டோம். டிஜிட்டல் தரவுகளை கேட்டோம் தரவில்லை. டிஜிட்டல் தரவுகளை தேர்தல் ஆணையம் வழங்காததற்குக் காரணம், அவ்வாறு செய்தால், அதன் உண்மை நிலை வெளியே வந்துவிடும். வாக்கு திருட்டு என்பது வெறும் தேர்தல் மோசடி மட்டுமல்ல, அது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு எதிரான ஒரு பெரிய மோசடி. நாட்டின் குற்றவாளிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். காலம் மாறும், நிச்சயமாக தண்டனை வழங்கப்படும். இவ்வாறு தெரிவித்தார்.

* ராகுல் கேள்விக்கு பதில் வேண்டும்: சசிதரூர் டிவிட்
தேர்தல் முறைகேடு தொடர்பாக ராகுல்காந்தியின் கேள்விக்கு பதில் வேண்டும் என்று சசிதரூர் டிவிட் செய்துள்ளார். அதில் அவர்,’ நமது ஜனநாயகம் மிகவும் விலைமதிப்பற்றது. திறமையின்மை, கவனக்குறைவு அல்லது மோசமான, வேண்டுமென்றே செய்யப்படும் மோசடிகளால் அதன் நம்பகத்தன்மை அழிக்கப்படுவதை அனுமதிக்க கூடாது. ராகுல்காந்தியின் கடுமையான கேள்விகளுக்குத் தீர்வு காணப்பட வேண்டும். தேர்தல் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை அனைத்து வாக்காளர்களின் நலனுக்காகவும் தீவிரமாகக் கவனிக்கப்பட வேண்டிய தீவிரமான கேள்விகள். தேர்தல் ஆணையம் அவசரமாக செயல்பட்டு, தேசத்திற்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Election Commission ,Rahul Gandhi ,YouTube ,India ,BJP ,
× RELATED தமிழ்நாட்டில் இதுவரை 99.27% எஸ்ஐஆர்...