×

செஞ்சி அருகே 1500 கிலோ ரேஷன் அரிசி கடத்திய 4 பேர் கைது

செஞ்சி, ஆக.8: விழுப்புரம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் செஞ்சி தாலுகா நரசிங்கராயப்பேட்டை பகுதியில் வாகன தணிக்கை செய்தனர். அப்போது செஞ்சி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்திலிருந்து செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள பள்ளி சத்துணவுக் கூடங்கள் மற்றும் காலை உணவு திட்டத்திற்கு தேவையான ரேஷன் அரிசி விநியோகிக்கும் மினி லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். இதில் பட்டியலில் கண்ட இடங்களில் விநியோகம் முடித்து கூடுதலாக 30 சாக்கு பைகளில் 50 கிலோ வீதம் 1500 கிலோ அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் நடத்திய விசாரணையில் விநியோகிக்கும் ஒவ்வொரு பள்ளிகளிலும் தலா 30 முதல் 50 கிலோ வரை சேகரித்து மொத்தமாக செஞ்சி சுற்றுவட்டார பகுதியில் உள்ள ஹோட்டல் கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக எடுத்து வந்தது தெரியவந்தது. ரேஷன் அரிசி கடத்திய அந்த வாகனத்தில் ஓட்டுநர் மற்றும் சுமை தூக்கும் தொழிலாளர்கள் விக்கிரவாண்டி வி.சாலை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் மகன் முத்துக்குமார் (34), திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சோழபூண்டி ராமையன் மகன் அரவிந்தன் (22), செஞ்சி மேலச்சேரி லோடுமேன்கள் சர்க்கரை மகன் ராஜு (42), செஞ்சி மேலச்சேரி ரத்தினம் மகன் கண்ணதாசன் (59) ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பினர். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Tags : Senchi ,Villupuram Civil Supplies Crime Investigation Department ,Narasingarayapettai ,Senchi taluka ,Senchi Tamil Nadu Consumer Goods Trading Corporation ,
× RELATED ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்து...