×

சிவகங்கையில் சராசரியைவிட அதிகம் பெய்யும் மழைநீரை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? இயற்கை ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு

 

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து சராசரியை அளவைவிட கூடுதலாக மழை பெய்து வரும் நிலையில், மழைநீரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் ஆண்டு சராசரி மழையளவு 904.7மி.மீ ஆகும். மாவட்டத்தில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை (ஜூலை முதல் செப்டம்பர்) 309.6 மி.மீ, வடகிழக்கு பருவமழை (அக்டோபர் முதல் டிசம்பர்) 413.7மி.மீ சராசரியாக பெய்ய வேண்டும். கடந்த 2017ம் ஆண்டு 976.6 மி.மீ, 2018ம் ஆண்டு 924.4 மி.மீ, 2019ம் ஆண்டு 1006.7 மி.மீ, 2020ம் ஆண்டு 1117.6மி.மீ, 2021ம் ஆண்டு 1276.77 மி.மீ, 2022ம் ஆண்டு 1127.99 மி.மீ, 2023ம் ஆண்டு 1005.9 மி.மீ, 2024ம் ஆண்டு 1161.91 மி.மீ மழை பெய்துள்ளது. அதாவது, கடந்த 8 ஆண்டுகளாக சராசரி அளவை விட கூடுதலாகவே மழை பெய்துள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையை மட்டுமே நம்பி விவசாயம் செய்யப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக தென் மேற்கு பருவ மழையும் சராசரி அளவில் பெய்து வருகிறது. மழையளவு தொடர்ந்து 8 ஆண்டுகளாக சராசரியை விட குறையாமல் பெய்தாலும், விவசாயம் கடந்த ஆண்டுகளில் முழுமையான விளைச்சலுடன் இல்லை. எனவே, மழைநீரை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது: கடந்த 8 ஆண்டுகளாக ஆண்டு சராசரி அளவைவிட கூடுதலாக மழை பெய்துள்ளது என்பது, மழை கணக்கீட்டின் மூலம் மட்மே தெரிகிறது.

ஆனால் கண்மாய், குளங்களில் மழைநீர் தேங்கவில்லை. வரத்து கால்வாய்கள் சரிவர பராமரிப்பில்லாதது, ஆக்கிரமிப்புகள் உள்ளிட்ட காரணங்களால் கண்மாய், குளங்களுக்கு நீர்வரத்து போதிய அளவில் இல்லை. வரத்து கால்வாய்கள், நீர்ப்பிடிப்பு பகுதிகளை பாதுகாக்கவும், பராமரிக்கவும், மழை நீரை சேகரிக்கவும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் போதிய மழை பெய்யும் நிலையில் பயனுள்ளதாக இருக்கும் என்றனர். இதுகுறித்து பேரிடர் மேலாண்மை அலுவலர்கள் தெரிவித்ததாவது: காலம் தவறிய பருவ மழை, சில பகுதிகளில் அதிகப்படியாகவும், சில பகுதிகளில் மிகக் குறைவாகவும் பெய்கிறது. இதுவே விவசாயம் சீராக நடைபெறாததற்கு காரணம். மழைநீர் சேகரிப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றனர்.

 

Tags : Sivakanga ,Sivaganga ,Sivaganga district ,
× RELATED திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில்...