×

ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர் சங்க போராட்டம் ஒத்திவைப்பு

திருப்பூர், ஆக.6: தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை தொழிலாளர் சங்கம் சார்பில் நேற்று முதல் மாவட்ட தலைநகரங்களில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்திருந்தனர். இந்த நிலையில் கோரிக்கைகளை தொடர்பாக கடந்த 4ம் தேதி ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையருடன் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை சென்னையில் நடந்தது.

இதில் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பரிசீலனை செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நேற்று திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட வந்த ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்களிடம் ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் சார்பில் பேச்சு வார்த்தை விளக்க கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.

இதில் பேச்சுவார்த்தையில் ஏற்படுத்தப்பட்ட உடன்பாடு மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஆணையர் மற்றும் கூடுதல் இயக்குனர்கள் அளித்த வாக்குறுதிகள் எடுத்துக் கூறப்பட்டு போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதாக தெரிவித்தனர்.  இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த பணியாளர்கள் கலைந்து சென்றனர். தமிழக அரசு தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத பட்சத்தில் கூடிய விரைவில் அடுத்த கட்ட போராட்டங்களை முன்னெடுக்க போவதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், ஏஐடியூசி சங்கத்தின் மாவட்ட பொதுச்செயலாளர் நடராஜன், மாநில செயலாளர் சேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

Tags : Rural Development Department Labor Union ,Tiruppur ,Tamil Nadu Rural Development Workers' Association ,Tamil Nadu ,Chennai ,Commissioner ,Rural Development ,Public Works ,Workers' Association ,
× RELATED அதிமுகவில் இருந்து விலகி 50 பேர் திமுகவில் இணைந்தனர்