×

தாறுமாறாக ஓடிய லாரி பாலத்தில் மோதி கவிழ்ந்தது

கோவில்பட்டி, டிச. 4: கோவில்பட்டியில் தாறுமாறாக ஓடிய லாரி, பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் டிரைவர் படுகாயமடைந்தார்.
 கர்நாடகா மாநிலம், மைசூரில் கழிவுரப்பர்களை ஏற்றிக்கொண்ட லாரி ஒன்று நெல்லை நோக்கி வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை மைசூர் சாம்ராஜ் நகரைச் சேர்ந்த ராகபூஷன் மகன் மகேந்திரன் (26) என்பவர் ஓட்டி வந்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி கூடுதல் பஸ்நிலையம் அருகே 4 வழிச்சாலையில் நேற்று வந்த போது எதிர்பாராதவிதமாக தாறுமாறாக ஓடியதோடு பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் மகேந்திரன் படுகாயமடைந்தார்.

 தகவலறிந்து விரைந்து வந்த கோவில்பட்டி மேற்கு போலீசார், டிரைவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நான்கு வழிச்சாலையில் விபத்து நடந்ததால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து வாகனங்கள் அனைத்தும் அணுகுசாலை வழியாக திருப்பி விடப்பட்டன. பின்னர்  லாரியை மீட்டு சீரமைத்த போலீசார், விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED லாரி டிரைவர் மர்மச்சாவு.