![]()
டெல்லி: கடந்த 9 ஆண்டுகளில் கைத்தறி வர்த்தகம் ரூ.30,000 கோடியில் இருந்து 1.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் தேசிய கைத்தறி தின விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். நெசவாளர்கள், கைவினைஞர்கள், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில்துறையினரை பிரதமர் சந்தித்துப் பேசினார். கைத்தறி நெசவாளர்களின் வேலைபாடுகள் குறித்து அவர்களிடம் கேட்டறிந்தார். கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் 2015 முதல் கைத்தறி தினம் கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து, இந்திய ஜவுளி மற்றும் கைவினைக் களஞ்சிய போர்ட்டலை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். பின்னர் இதுகுறித்து பேசிய பிரதமர் மோடி, கடந்த 9 ஆண்டுகளில் கைத்தறி வர்த்தகம் ரூ.30,000 கோடியில் இருந்து 1.30 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது. காதி ஆடைகளின் விற்பனையும் 5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் காதி ஆடைகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது.
உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க பாஜகவின் ஒவ்வொரு உறுப்பினரும் குரல் கொடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். கடந்த நூற்றாண்டில் வலுவாக இருந்த துணித் தொழிலை (காதி) வலுப்படுத்த சுதந்திரத்திற்குப் பிறகு, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அது செத்துப்போகும் நிலை ஏற்பட்டது. காதி அணிந்தவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்கப்பட்டனர் என்று பிரதமர் மோடி பேசினார்.
The post கடந்த 9 ஆண்டுகளில் கைத்தறி வர்த்தகம் ரூ.30,000 கோடியில் இருந்து 1.30 லட்சம் கோடியாக அதிகரிப்பு: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு appeared first on Dinakaran.
