×

அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க தொப்பூர் கணவாயில் 8 கி.மீ., தூரம் தோண்டப்பட்ட பள்ளங்கள்: சாலையோரம் வாகனங்கள் நிறுத்த தடை

தர்மபுரி: தொப்பூர் கணவாயில் சாலை விபத்துகளை கட்டுப்படுத்தவும், வாகனங்கள் நிறுத்துவதை தடுக்கவும், 8 கி.மீ., தூரத்துக்கு சாலையோரம் பெரிய அளவிலான பள்ளங்கள் தோண்டப்பட்டுள்ளது. சேலம்-தர்மபுரி மாவட்ட எல்லையில், தொப்பூர் கணவாய் உள்ளது. மலைக்குன்றுகளால் சூழப்பட்டுள்ள தொப்பூர் கணவாயின் வழியாக, சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. தினசரி இந்த கணவாயின் வழியாக லட்சக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்கின்றன. டோல்கேட்டில் இருந்து தொப்பூர் ரயில்வே இரட்டை பாலம் வரை, 8 கிலோ மீட்டர் தூரம் சாலை ஏற்றமும், இறக்கமாகவும், வளைந்தும் செல்கிறது.
குறிப்பாக தொப்பூர் கணவாயில் 4 கிலோ மீட்டர் தூரம், மிகவும் அபாயகரமான வளைவுகள் கொண்ட சாலையாக உள்ளது. தொப்பூர் கணவாயில் விபத்து ஏற்பட்டால், மணிக்கணக்கில் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பெரிய விபத்து என்றால், இருபுறமும் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. இதனால், தொப்பூர் கணவாய் பீதியூட்டும் இடமாகவே இருந்து வருகிறது.

இந்த கணவாயில் வாகன விபத்துக்களை கட்டுப்படுத்த, தர்மபுரி மாவட்ட நிர்வாகமும், போக்குவரத்து துறையும், எல் அண்டு டி நிர்வாகமும் இணைந்து, பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. சாலையோரங்களில் ஆங்காங்கே விழிப்புணர்வு பலகைகள், பிரதிபலிப்பான் ஸ்டிக்கர், வேகத்தடை, ஒலிபெருக்கியில் எச்சரிக்கை செய்யப்படுகிறது. மேலும், வாகனங்களின் வேகத்தை குறைக்க கட்டமேடு பகுதியில், சாலையில் இரும்பு பேரிகார்டுகள் அமைத்து, வேகத்தை குறைத்து செல்லும்படி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. மேலும், நவீன கேமராவுடன் கருவிகள் அமைக்கப்பட்டு, விதிமுறைகளை மீறி வேகமாக வரும் வாகனங்களை கண்டறிந்து, அபராதம் வசூலிக்கப்படுகிறது. இதனால் விபத்துக்கள் எண்ணிக்கை குறைவதோடு, உயிரிழப்பும் தடுக்கப்பட்டு, ஓரளவுக்கு கட்டுக்குள் வந்து உள்ளது.

இந்த நிலையில், கடந்த வாரம் ஒரே சமயத்தில் அடுத்தடுத்த 3 லாரி, 3 கார்கள் விபத்தில் சிக்கின. 2 டிரைவர்கள் காயம் அடைந்தனர். நேற்று முன்தினம், 2 கன்டெய்னர் லாரிகள் மோதியதில் ஒருவர் பலியானார். அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், விபத்துகள் தொடர்கதையாக உள்ளது. சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்துவதாலும், அதிகாலை நேரத்தில் அதிகப்படியான விபத்துக்கள் நடக்கிறது. இதனால், விபத்துக்களை தடுக்க தொப்பூர் கணவாய் பகுதியில், சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் நிறுத்தாத வகையில், தொப்பூர் கணவாய் காப்புக்காடு – தேசிய நெடுஞ்சாலை ஒரத்தில், பெரிய பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘தொப்பூர் கணவாய் பகுதியில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில், சாலையோரம் விதிமுறைகளை மீறி வாகனங்களை நிறுத்தி, சமைத்து சாப்பிடுகின்றனர். சிலர் வாகனங்களை நிறுத்தி விட்டு மது அருந்துகின்றனர். ஒருசிலர் இளைப்பாறவும் வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால் அவ்வழியாக வரும் கார் உள்ளிட்ட வாகனங்கள், சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி உள்ளிட்ட வாகனங்களின் பின்பக்கம் மோதி விபத்தில் சிக்குகின்றன. மேலும், குற்றச்செயல்கள் நடக்க வாய்ப்புள்ளது. இதை தவிர்க்கவே, தொப்பூர் கணவாய் பகுதியில் வாகனங்கள் நிறுத்த தடை செய்யப்பட்டுள்ளது. லாரிகள் நிறுத்தாமல் இருக்க 8 கி.மீ தூரத்துக்கு, சாலையோரம் பெரிய, பெரிய குழிகள் தோண்டப்பட்டுள்ளது. வாகனங்கள் நிறுத்த தடை என விழிப்புணர்வு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனத்தை நிறுத்தினால், வாகன உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர்.

The post அதிகரிக்கும் விபத்துகளை தடுக்க தொப்பூர் கணவாயில் 8 கி.மீ., தூரம் தோண்டப்பட்ட பள்ளங்கள்: சாலையோரம் வாகனங்கள் நிறுத்த தடை appeared first on Dinakaran.

Tags : Doppur Kanavalam ,Darmapuri ,Toppur Kannavayam ,Toppur Kanawayam ,Dinakaran ,
× RELATED தர்மபுரி அருகே பரபரப்பு கோவை நகைக்கடை...