×

கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கினால் 5 ஆண்டு சிறை: நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை

சென்னை: கழிவு நீர் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கினால் 5 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார். நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: மனித கழிவுகளை அகற்றும் தொழில்புரிவோர் தடுப்பு மற்றும் அவர்களது மறுவாழ்வு சட்டம் 2013ன்படி கழிவுநீர் தொட்டியில் எந்தவொரு சூழ்நிலையிலும் இறங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர் தொட்டியினை இயந்திரங்களால் மட்டுமே சுத்தம் செய்ய வேண்டும்.

இந்த சட்டத்தின் பிரிவு 7ன்படி எந்தவொரு நபரோ, உள்ளாட்சி அமைப்போ அல்லது எந்தவொரு நிறுவனமோ நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு பணியாளரையும் அபாயகரமான கழிவுநீர் கட்டமைப்புகளை கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடுத்த கூடாது. மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதன்முறையாக மீறினால் 2 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும். 2வது முறை மீறினால் 5 ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் அல்லது இரண்டும் சேர்ந்தோ விதிக்கப்படும்.

கழிவுநீர் கட்டமைப்பு மற்றும் கழிவுநீர் சேகரிப்பு தொட்டியை சுத்தம் செய்யும் போது உயிரிழப்பு ஏற்பட்டால் இப்பணியில் ஈடுபடுத்திய உரிமையாளர், ஒப்பந்ததாரர், பணி அமர்த்தியவர்கள் மீது மனித கழிவுகளை அகற்றும் தொழில் புரிவோர் தடுப்பு மற்றும் மறுவாழ்வு சட்டம் 2013, இந்திய தண்டனை சட்டம் மற்றும் நடைமுறையில் உள்ள இதர சட்டங்களின்படியும் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் 2002, ஜூன் 7ம் தேதி வெளியிடப்பட்ட நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசாணை 83ன் படி ரூ.15 லட்சம் இழப்பீடாக இறந்த பணியாளரின் வாரிசுதாரருக்கு வழங்கப்பட வேண்டும்.

மேலும் 2022 டிசம்பர் 31ம் தேதி வெளியிடப்பட்ட அரசாணை 183 மூலம் 2022ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகள், சென்னை பெருநகரப் பகுதி கழிவுநீர் மேலாண்மை ஒழுங்குமுறை விதிகள், 2023ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புக்கள் விதிகளின் படியும் அனைத்து கழிவுநீர் லாரிகளும் அந்தந்த உள்ளாட்சி அமைப்புகளில் மற்றும் சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற வேண்டும். உரிமத்தில் குறிப்பிட்டுள்ள கழிவுநீர் உந்து நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்களில் மட்டுமே கழிவுநீரை வெளியேற்ற வேண்டும்.

அனைத்து கழிவுநீர் லாரிகளும் முறையான பராமரிப்புடன் இருக்க வேண்டும். லாரிகளின் இயக்கங்கள் ஜிபிஎஸ் கருவிகள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும். பொதுமக்கள் 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் சேவையினை வரும் 19ம் தேதி முதல் சென்னை மாநகராட்சி பகுதிகளிலும், ஜூன் 30ம் தேதி முதல் அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் உரிமம் பெற்ற லாரிகள் மூலம் அதற்கான கட்டணத்தை செலுத்தி இச்சேவையை பெறலாம். உரிமம் பெற்ற கழிவுநீர் லாரி இயக்குபவர்கள், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் சேவைக்கான அழைப்புகளை பொதுமக்களிடம் இருந்து நேரடியாகவும் பெறலாம்.

அவ்வாறு பெறப்பட்ட அழைப்பின் விவரங்களை 14420 எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்த பின்பு தான், கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வேண்டும். உரிமையாளர் 6 தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களான பிரதிபலிப்பு ஆடை, பாதுகாப்பு கண் கண்ணாடிகள், கம்பூட்ஸ், தலைப்பட்டை பாதுகாப்பு கையுறை மற்றும் பாதுகாப்பு முகக்கவசம் வாங்கி லாரியில் எப்போதும் இருப்பதும், பணியாளர்கள் அதனை அணிவதும் உறுதி செய்தல் வேண்டும். மேலும் வாயு வெளியேற மின்விசிறி பயன்பாட்டிற்கு இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் லாரிகளுக்கு முதன் முறைக்கு ரூ.25,000, 2வது முறைக்கு ரூ.50,000 அபராதம் விதிக்கவும், தொடர்ந்து விதிமீறலில் ஈடுபடும் லாரிகள் பறிமுதல் செய்யவும் சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

The post கழிவுநீர் தொட்டிக்குள் மனிதர்களை இறக்கினால் 5 ஆண்டு சிறை: நகராட்சி நிர்வாக துறை கூடுதல் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Tags : Chief Secretary ,Municipal Administration Department ,Chennai ,Municipal Administrative Department ,Additional Chief Secretary of ,
× RELATED வடகிழக்கு பருவமழை : தலைமைச் செயலாளர் ஆலோசனை