×

சென்னை மடிப்பாக்கம் அருகே குளத்தில் மூழ்கி இறந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: சென்னை மடிப்பாக்கம் அருகே குளத்தில் மூழ்கி இறந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு நங்கநல்லூரில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் திருவிழாவின் போது, மூவரசன்பட்டு குளத்து நீரில் நின்று பாராயணம் ஓதும் போது 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். 20 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர். சென்னை நங்கநல்லூரில் பழமையான தர்மலிங்கேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி உத்திரத்தின் போது, தீர்த்த வாரி திருவிழா வெகு விமரிசையாக கோயில் நிர்வாகம் சார்பில் எடுப்பது வழக்கம். அதன்படி நேற்று முதல் தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகம் சார்பில் பல்வேறு கால பூஜைகளுடன் விழா நடந்து வருகிறது.

அப்பகுதியில் புகழ்பெற்ற கோயில் என்றாலும், தர்மலிங்கேஸ்வரர் கோயிலுக்கு குளம் கிடையாது. இதனால் கோயில் நிர்வாகம் ஒவ்வொரு ஆண்டும், பழவந்தாங்கல் அருகே உள்ள மூவரசன்பட்டில் உள்ள கெங்கையம்மன் கோயில் அருகே அமைந்துள்ள ஊராட்சி குளத்தில் தான் கோயில் விழாவுக்கான தெப்பம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடத்துவது வழக்கம்.
அதன்படி தர்மலிங்கேஸ்வரர் கோயில் நிர்வாகத்தில் இருந்து 50க்கும் மேற்பட்ட குருக்கள் அடங்கிய குழு இன்று காலை மூவரசன்பட்டில் உள்ள ஊராட்சி குளத்திற்கு வந்தனர். குளத்தில் தண்ணீர் அதிகளவில் இருந்தது. பின்னர் நடைபெறும் தெப்ப விழாவுக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு, அனைவரும் நிகழ்ச்சி நடைபெறும் குளத்தில் இறங்கி படித்துறையில் நின்றபடி மார்பளவு தண்ணீரில் இறங்கி குருக்கள் பாராயணம் ஓதும் போது, ஒவ்வொருவராக தண்ணீரில் மூழ்கி எழுந்துள்ளனர்.

அப்போது கடைசியாக பாராயணம் ஓதும் போது அனைவரும் ஒன்றாக தண்ணீரில் மூழ்கியுள்ளனர். அப்போது, நங்கநல்லூரை சேர்ந்த சூர்யா(24), மடிப்பாக்கத்தை சேர்ந்த ராகவன்(18), கீழ்க்கட்டளை யோகேஸ்வரன்(23), நங்கநல்லூரை சேர்ந்த பணேஷ்(20) ஆகியோர் தண்ணீரில் இருந்து மீண்டும் வெளியே வரவில்லை.

இதனால் சக குருக்கள் அனைவரும் அலறி அடித்து உதவி கேட்டு கத்தினர். அப்போது மூவரசன்பட்டு பகுதியில் உள்ள மக்கள் கோயில் குளத்தில் இறங்கி அனைவரையும் தேடினர். ஆனால் யாரும் கிடைக்க வில்லை. பிறகு கடும் போராட்டத்திற்கு பிறகு மக்கள் குளத்தில் மூழ்கிய 5 பேர் உடலை மீட்டனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்த பழவந்தாங்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் 5 பேருக்கு முதல் உதவி அளித்தனர். ஆனாலும், அவர்கள் தண்ணீரை அதிகளவில் குடித்து இருந்ததால் யாரும் சுய நினைவு இல்லாமல் இருந்தனர். உடனே 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அவர்கள் வந்து பார்த்த போது, 5 பேரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இது தொடர்பாக முதல்வர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரம் வட்டம், மூவரசம்பட்டு கிராமத்தில் உள்ள தர்மலிங்கேசுவரர் கோயில் தெப்பக்குளத்தில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, தீர்த்தவாரி நிகழ்ச்சிக்காக இன்று காலை 9.30 மணியளவில், கோயில் அர்ச்சகர்களும், அப்பகுதி மக்களும் நீரில் இறங்கியபோது, எதிர்பாராதவிதமாக குளத்தில் மூழ்கி, திரு. சூர்யா (வயது-22), திரு. பானேஷ் (வயது-22), திரு.ராகவன் (வயது-22) திரு. யோகேஸ்வரன் (வயது-21) மற்றும் திரு. ராகவன் (வயது-18) ஆகிய ஐந்து பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

The post சென்னை மடிப்பாக்கம் அருகே குளத்தில் மூழ்கி இறந்த 5 பேர் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Folding Chennai ,Chief Minister ,B.C. G.K. Stalin ,Chennai ,Chennai Folding ,Dinakaran ,
× RELATED சொல்லிட்டாங்க…