திருவள்ளூர்: பூந்தமல்லி அடுத்த திருமழிசை சிட்கோ பகுதியில் வசித்து வருபவர் நூர்முகமது ஷேக்(45). ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த இவர் கட்டிட வேலை செய்வதற்காக இங்கு தங்கி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று திருமழிசை பகுதியில் மார்க்கெட்டுக்கு சென்று பொருட்கள் வாங்கிக் கொண்டு பிரயாம்பத்து கிராமம் அம்மன் கோயில் அருகே நடந்து வந்து கொண்டிருந்த போது அவரை வழிமறித்த 4 இளைஞர்கள் நூர்முகமது ஷேக்கிடமிருந்து ரூ.2500 பணம் மற்றும் செல்போன் ஆகியவற்றையும் பிடுங்கிக் கொண்டு அடித்து உதைத்து துரத்தியுள்ளனர். இதல் பலத்த காயம் அடைந்த அவர் அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இது குறித்து வெள்ளவேடு போலீசில் நூர்முகமது ஷேக் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து உதவி ஆணையர் ஜவஹர் உத்தரவின் பேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் லில்லி மற்றும் தலைமைக் காவலர் சௌரிதாஸ் மற்றும் போலீசார் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் பிரயாம்பத்து கிராமத்தில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் பன்னீர் மகன் சதீஷ்(25), வீரா மகன்கள் பிரசாந்த்(24), ஆனந்த்ராஜ்(23), சகாயம் மகன் கௌதம்(22) ஆகிய 4 பேரை கைது செய்து மேற்கொண்ட விசாரணையில் இந்த வழிப்பறி மற்றும் தாக்குதலில் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து 4 பேரையும் கைது செய்த வெள்ளவேடு போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
The post வடமாநில தொழிலாளியை தாக்கி செல்போன், பணம் பறிப்பு: 4 இளைஞர்கள் பிடிபட்டனர் appeared first on Dinakaran.