×

கடந்த 21 நாட்களில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவுகள் 4350 கிலோ பிளாஸ்டிக் அகற்றம்

*தன்னார்வலர்கள் ஒத்துழைப்புடன் அரசு நிர்வாகம் நடவடிக்கை

விகேபுரம் : கடந்த 21 நாட்களில் தன்னார்வலர்கள், அரசு துறை பணியாளர்கள் முயற்சியின் பலனாக பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவுகள், 4350 கிலோ பிளாஸ்டிக், 95 கிலோ சோப், ஷாம்பு கவர் அகற்றப்பட்டது. பாபநாசத்தில் பிரசித்தி பெற்ற பாபநாச சுவாமி கோயில் உள்ளது.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் பரிகாரம் செய்து தாமிரபரணியில் புனித நீராடி ஆடைகளை களைந்து தண்ணீரில் விட்டு செல்கின்றனர். இதனால் ஆறு மாசுபடுவதோடு துணிகள் குளிப்பவர்களின் காலில் சிக்கி ஆபத்தை ஏற்படுத்துகிறது.

இந்த துணிகளை களைந்து போடுவதற்காக ஆற்றங்கரையில் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது. ஆற்றில் துணிகழிவுகளை போடக்கூடாது என்று ஒலிப்பெருக்கி வாயிலாக தினமும் போலீசார் அறிவுரை வழங்கி வருகின்றனர். அதை பக்தர்கள் பொருட்படுத்தாமல் ஆற்றினுள் போடுவது வாடிக்கையாக உள்ளது.

இதனால் ஒவ்வொரு முறையும் டன் கணக்கில் துணி கழிவுகள் அகற்றப்பட்டு வருகிறது. மேலும் அகஸ்தியர் அருவி மற்றும் ஆற்றில் குளிக்க வரும் சுற்றுலா பயணிகள் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலீத்தின் பைகள், சோப்பு, ஷாம்பு பாக்கெட்டுகளை தண்ணீரில் போட்டு செல்கின்றனர். இதனால் தாமிரபரணியில் துணி கழிவுகளும், பிளாஸ்டிக் பொருட்களும் குவிந்து காணப்படுகிறது. இதனால் மாசு ஏற்படுவதோடு, தண்ணீர் செல்ல தடை ஏற்படுத்துவதால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி கிடக்கிறது.

இந்நிலையில் நெல்லை மாவட்ட கலெக்டர் சுகுமாரின் வழிகாட்டுதலின்படி, நீர்வளத்துறை, விகேபுரம் நகராட்சி, பாபநாசம் கோயில் நிர்வாகம் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் கோடைகால தூய்மை பணி கடந்த 7ம்தேதி துவங்கியது. யானைப் பாலம் முதல் தலையணை வரை 2 கிமீ தூரம் 21 நாட்கள் இப்பணி நடைபெற்றது.

இறுதி நாள் பணிக்கு ரோட்டரி சங்க முன்னாள் ஆளுநர் சுடலையாண்டி தலைமை வகித்தார். அம்பை ரோட்டரி சங்கத் தலைவர் கல்யாணசுந்தரம் பணியினை தொடங்கி வைத்தார். சங்க செயலாளர் கணேசன் முன்னிலை வகித்தார். ரோட்டரி சங்க உதவி ஆளுநர் பூங்குன்றன் பணி செய்த அனைவரையும் பாராட்டினார்.

இன்றைய தூய்மைப்பணிக்கு அம்பை ரோட்டரி கிளப் உதவி செய்தது. இறுதி நாள் தூய்மை பணியினை நெல்லை மாவட்டம் ஏரியா கமாண்டர் சுதன் உத்தரவின் பேரில், விகேபுரம் ஊர்காவல்படை கம்பெனி கமாண்டர் ராமநாதன் தலைமையின் கீழ் ஊர்காவல்படையினர் ஜோசப் சுப்பிரமணியன், பால்ராஜ், முத்துகுமார், பரமசிவன், செந்தில், முத்துபட்டன், பிச்சையா, சாலமோன் ஜெயராஜ், மகேஸ்வரி மற்றும் அரிப்புக்காரர்கள் ராமசாமி, செல்லத்துரை, ஐயாத்துரை, அம்பை துரை, பருத்திபால் சங்கர், துரை, மலை சுந்தரம் ஆகியோர் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 21 நாட்களில் துணி கழிவுகள் 93.8 டன், கற்சிலைகள் 3.5 டன், செடி கழிவுகள் 23.5 டன், பிளாஸ்டிக் கழிவு 4,540 கிலோ, கலையங்கள் 1720 கிலோ, செருப்புகள் 580 கிலோ, கண்ணாடி போட்டோ, பாட்டில்கள் 975 கிலோ, நாப்கின், டைபர் 255 கிலோ, தீபசட்டிகள் 120 கிலோ, சோப்பு, ஷாம்பு கவர் 95 கிலோ அகற்றப்பட்டது. இப்பணிகளை சுற்றுசூழல் ஆர்வலர் ஒருங்கிணைப்பாளர் கிரிக்கெட் மூர்த்தி செய்திருந்தார்.

The post கடந்த 21 நாட்களில் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் 93.8 டன் துணி கழிவுகள் 4350 கிலோ பிளாஸ்டிக் அகற்றம் appeared first on Dinakaran.

Tags : Papanasam Thamirabarani river ,Vikepuram ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் 50...