×

3ம் பாலினத்தவருக்கு சுய உதவிக்குழுக்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்

திருச்சி: தமிழ்நாட்டில் 3ம் பாலினத்தவருக்கான சுய உதவிக்குழுக்களை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி தனியார் ஓட்டலில் வாழ்ந்து காட்டுவோம் மற்றும் தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம் சார்பில் உற்பத்தியாளர், சந்தையாளர் ஒருங்கிணைப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு மதி சிறகுகள் தொழில் மையம் லட்சினை மற்றும் வாழ்ந்து காட்டுவோம் திட்ட பயனாளர்களின் வெற்றி புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் அமைச்சர் பேசியதாவது: தமிழகத்தில் 7 லட்சத்து 22 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன. இந்த குழுக்களில் 1 கோடியே 6 லட்சத்து 68 ஆயிரம் பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். மகளிர் சுய உதவிக்குழுக்கள் உங்கள் வாழ்வில் ஒளி ஏற்றி வைத்துள்ளது. இந்த குழுக்கள் கிராமப்புறங்களில் சந்தமில்லாமல் மிகப்பெரிய தொழில் புரட்சியையே செய்து கொண்டிருக்கின்றன. யாருக்காவது நான் பரிசு தர வேண்டும் என்று விரும்பினாலும், எனக்கு யாராவது பரிசு தர வேண்டுமானால், மகளிர் சுய உதவிக்குழுவினர் உற்பத்தி செய்த பொருட்களையே வாங்கி வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளேன்.

வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் ஓரிட சேவை மையங்கள் (ஒன் ஸ்டாப் சென்டர்) மதி சிறகுகள் தொழில் மையம் என்று இன்று முதல் பெயர் சூட்டப்படுகிறது. விவசாயிகள் உற்பத்தி பொருட்களை சந்தைப்படுத்த தமிழகத்தில் 6,000 மகளிர் குழுக்கள் இயங்கி வருகின்றன. உங்கள் வெற்றி அடுத்தக்கட்டத்துக்கு செல்ல இ-காமர்ஸ் மூலம் சந்தைப்படுத்துதல் திட்டத்தை விரைவில் தொடங்க உள்ளோம். 3ம் பாலினத்தவருக்கான சுய உதவிக்குழு துவங்க வேண்டும் என்று திருச்சி கலெக்டர் பிரதீப்குமார் கோரிக்கை விடுத்தார்.

அவரது கோரிக்கையை ஏற்று இது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். பின்னர், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் சார்பில் தயாரிக்கப்பட்ட பொருட்களை காட்சிப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்கை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்து பார்வையிட்டார். அங்கு கம்பு, தினை லட்டுகள், வரகு காரச்சேவு உள்ளிட்ட தின்பண்டங்களை அவர் ருசித்துப் பார்த்தார்.

* தமிழகத்தில் அடுத்த ஆண்டு கேலோ இந்தியா யூத் கேம்ஸ்
தஞ்சாவூரில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: இங்கே பள்ளிக் கல்வித்துறை அமைச்சர், ஆசிரியர்கள் எல்லாம் வந்திருக்கிறீர்கள். தயவு செய்து விளையாட்டு வீரர்களை உருவாக்கும் விளையாட்டு பீரியடை கடன் வாங்காமல், முடிந்தால் உங்களது சயின்ஸ், மேக்ஸ் பீரியடுகளை எங்களுக்கு கடன் கொடுத்து விளையாட்டை ஊக்கப்படுத்த அமைச்சரையும், ஆசிரியர்களையும் கேட்டுக் கொள்கிறேன். வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் ஏசியா உலகக் கோப்பை ஆக்கி போட்டியை நடத்த உள்ளோம். இதனால் ஒன்றிய அரசு அடுத்த ஆண்டு கேலோ இந்தியா யூத் கேம்ஸை தமிழகத்தில் நடத்த வாய்ப்பு அளித்திருக்கிறது என்றார்.

The post 3ம் பாலினத்தவருக்கு சுய உதவிக்குழுக்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல் appeared first on Dinakaran.

Tags : Minister ,Udayanidhi Stalin ,Trichy ,Tamil Nadu ,Trichy… ,
× RELATED கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம்...