×

33 சதவீத இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு பா.ஜ அரசு நம்பிக்கை துரோகம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு

புதுடெல்லி: பெண்கள் இடஒதுக்கீடு மசோதா பெண்களின் நம்பிக்கைக்கு பா.ஜ அரசு செய்த துரோகம் என்று காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டர் பதிவில், ‘தேர்தலுக்காக மோடி அரசின் வெற்று வாக்குறுதிகளில், இது எல்லாவற்றிலும் மிகப்பெரியது! கோடிக்கணக்கான இந்திய பெண்கள் மற்றும் சிறுமிகளின் நம்பிக்கைக்கு மிகப்பெரிய துரோகம். நாங்கள் முன்பே சுட்டிக்காட்டியது போல், மோடி அரசு 2021ம் ஆண்டு நடத்த வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தவில்லை. ஜி 20 நாடுகளில் இந்தியா மட்டுமே மக்கள்தொகை கணக்கெடுப்பை மேற்கொள்ளத் தவறிவிட்டது.

இப்போது அது பெண்களுக்கான இடஒதுக்கீடு முதலில் நடைமுறைக்கு வரும் என்று கூறுகிறது. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா சட்டமாக மாறிய பிறகு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடைபெறும்?.அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து எல்லை மறுசீரமைப்பு செய்த பின்னரே இடஒதுக்கீடு அமலுக்கு வரும் என்றும் மசோதா கூறுகிறது. எனவே இந்த மசோதா, அதன் நடைமுறை தேதி குறித்த தெளிவற்ற வாக்குறுதியுடன் வெளிவந்துள்ளது. பிரதமருக்கு பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் உண்மையான எண்ணம் இருந்தால், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா, இதர நிபந்தனைகள் இல்லாமல் உடனடியாக அமல்படுத்தப்பட்டிருக்கும். மோடிக்கும், பாஜவுக்கும், இது ஒரு தேர்தல் வெற்று வாக்குறுதி மட்டுமே’ என்று தெரிவித்துள்ளார்.

* 10 ஆண்டுகள் காத்திருந்தது ஏன்?
முன்னாள் சட்ட அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது: இந்த மசோதா அரசியல் உள்நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 2014ல் ஆட்சிக்கு வந்தது முதல் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் மற்றும் நான்கு மாதங்கள் ஆன நிலையில், இந்த மசோதா இன்று ஏன் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது எனக்கு புரியாமல் உள்ளது. இதற்காக அவர் 10 ஆண்டுகள் காத்திருந்தது ஏன்? பெண்களுக்கு அதிகாரம் வழங்குவதில், மோடிக்கு உண்மையான ஆர்வம் இருந்திருந்தால், 2014ல், மசோதாவை தாக்கல் செய்திருப்பார். எனவே, மசோதாவை நிறைவேற்றுவது என்பது 2024 தேர்தலுக்காக மோடி விற்கும் மற்றொரு கனவாகும். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார்.

* இது எங்களுடையது: சோனியா உருக்கம்
மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது என்று காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் சோனியாகாந்தி நுழையும் போது, ​​மசோதா பற்றி கேட்டதற்கு,’இது எங்களுடையது, எங்களுடைய தருணம்’ என்று அவர் கூறினார்.

The post 33 சதவீத இடஒதுக்கீடு மசோதா பெண்களுக்கு பா.ஜ அரசு நம்பிக்கை துரோகம்: காங்கிரஸ் குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Tags : BJP ,Congress ,New Delhi ,BJP government ,
× RELATED கரூர் 41 பேர் பலி விவகாரத்தில் வரும் 19ம்...