நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் பால்பண்ணைச்சேரி ஆண்டோ சிட்டி நகரை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (33). திருச்சியை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் நாராயணசாமி (69), இவரது மருமகன் தனபாலன் (49). நாகப்பட்டினம் அருகே பனங்குடியில் உள்ள பொதுத்துறை நிறுவனமான ஓஎன்ஜிசியில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 பேரும் கடந்தாண்டு நாகப்பட்டினம், திருவாரூர் ஆகிய மாவட்டத்தை சேர்ந்த 19 பேரிடம் ரூ.2 லட்சம் முதல் ரூ.4 லட்சம் வரை மொத்தம் ரூ.58 லட்சம் பெற்றுள்ளனர்.
ஆனால் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தை திருப்பி கேட்டும் கொடுக்காமல் ஏமாற்றியுள்ளனர். இதுதொடர்பாக வேதாரண்யத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (62) என்பவர், கடந்த மாதம் நாகப்பட்டினம் எஸ்பி ஹர்ஷ்சிங்கிடம் புகார் செய்தார். இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில், ஓஎன்ஜிசியில் வேலை வாங்கித்தருவதாக ரூ.58 லட்சத்தை 3 பேரும் மோசடி செய்தது உறுதிப்படுத்தப்பட்டது. ராஜேஸ்வரி மீது இதுபோன்று மோசடி வழக்கு நாகப்பட்டினத்தில் உள்ளதும் தெரிய வந்தது. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து ராஜேஸ்வரி உட்பட 3 பேரை நேற்றுமுன்தினம் இரவு கைது செய்தனர்.
The post ஓஎன்ஜிசியில் வேலை வாங்கி தருவதாக ரூ.58 லட்சம் மோசடி பெண், 2 பேர் கைது appeared first on Dinakaran.