
சென்னை: குன்றத்தூர் பகுதிகளில் சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 27 பேரை டெல்லி போலீசார் கைது செய்தனர். வெளிநாட்டினரைப் பற்றி தகவல் கிடைத்தால் உடனடியாக போலீசுக்கு தெரிவிக்கும்படி பொதுமக்களுக்கு போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு ஊர்களில் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் குறிப்பாக, வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கி பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக திருப்பூர், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தங்கி பணியாற்றுகின்றனர். அவர்களை தவிர தற்போது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் அவர்கள் பணியாற்ற தொடங்கிவிட்டனர். இந்நிலையில், வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் போர்வையில் வெளிநாட்டினர் பலரும் தங்கி வேலை செய்வதாக புகார்கள் எழுந்தது.
வழக்கமாக, சுற்றுலா அல்லது மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாட்டினர் வருவது வழக்கம். அவர்கள் முறையான விசா பெற்று வருகின்றனர். ஆனால் விசா இல்லாமல் சட்டவிரோதமாக சிலர் நுழைந்து நாடு முழுவதும் தங்கியிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்தான் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள், காஷ்மீரில் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலை தொடர்ந்து, நாடு முழுவதும் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் வெளியேற ஒன்றிய அரசு கெடு விதித்தது. மேலும், நாட்டில் வெளியேறாமல் உள்ளவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டது. இதை தொடர்ந்து, நாடு முழுவதும் பாகிஸ்தானியர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் சட்டவிரோதமாக தங்கியிருந்தால் அவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க தமிழக அரசு உத்தரவிட்டது.
அதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வெளிநாட்டினர் குறித்த ஆய்வுப் பணிகளை போலீசார் தொடங்கினர். இந்நிலையில், மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் வங்கதேச நாட்டை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக டெல்லி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீசார் நேற்று காலை தீவிர சோதனை மேற்கொண்டனர். இதில், மாங்காடு மற்றும் குன்றத்தூர் பகுதிகளில் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக தங்கி இருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 27 பேரை டெல்லி போலீசார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் மாங்காடு அடுத்த கொளப்பாக்கம் பகுதியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், உரிய ஆவணங்கள் இன்றி இந்த பகுதிகளில் தங்கி, சாலையோரங்களில் பழைய பொருட்களை சேகரித்து வந்தது தெரியவந்தது.
மேலும், இவர்கள் சட்டவிரோதமாக தமிழகத்திற்குள் வந்தது எப்படி, இவ்வளவு நாட்கள் எப்படி தங்கியிருந்தார்கள், இவர்களுக்கு தங்குவதற்கு இடம் கொடுத்த நபர்கள் யார் என்பது குறித்தும், தற்போது கைது செய்யப்பட்டவர்களில் பெண்கள், பெரியவர்கள் என அனைவரும் இருப்பதால், அவர்களின் முழு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. இவர்கள், இங்கு தங்கி இருந்த நாட்களில் பயங்கரவாத அமைப்புகளுக்கு ஏதேனும் உதவி புரிந்தார்களா அல்லது சதி செயலுக்காக சென்னை வந்தார்களா அல்லது வேலைக்காக வந்தார்களா என்று பல்வேறு கோணங்களில் டெல்லி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது, இவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள மண்டபத்தை சுற்றிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டை சேர்ந்த 27 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் மாங்காடு சுற்று வட்டாரப் பகுதிகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஜனவரி மாதம், திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் 29 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டனர். தற்போது சென்னை அருகே குன்றத்தூரில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் வேட்டைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பொதுமக்கள் 100க்கு தகவல் தெரிவிக்கலாம்
வெளிநாட்டினர் குறித்து தமிழக போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். ஆனாலும் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்ற போர்வையில் குடிசைப் பகுதியில் அவர்கள் தங்கியிருந்து கூலி வேலைகளை செய்யலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். இதனால் இதுபோன்று சட்டவிரோதமாக வெளிநாட்டினர் யாராவது தங்கியிருப்பது தெரியவந்தால், அருகில் உள்ள காவல்நிலையத்திலோ, போலீஸ் கட்டுப்பாட்டு அறை எண் 100க்கு போன் செய்து தகவல் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பெயர், முகவரி ரகசியமாக வைக்கப்படும் என்று போலீஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
The post குன்றத்தூரில் சட்ட விரோதமாக தங்கிய வங்கதேசத்தை சேர்ந்த 27 பேர் கைது: டெல்லி போலீசார் நடவடிக்கை appeared first on Dinakaran.
